இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் முதற்தடவையாக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் இணைந்துகொண்டனர்.
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக….
பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நீக்கி பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று கடந்த மாதம் நியமிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இதுதொடர்பில் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்போது பாடசாலை கிரிக்கெட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பன தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இறுதியாக கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு 15 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு ஒன்றும் கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் வீரர்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய, மஹேல ஜயவர்தன, ஜயந்த செனவிரத்ன, கால்டன் பேர்னார்ட்டோ உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன், பாடசாலை கிரிக்கெட் சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டது.
இதன்படி, இவ்விசேட ஆலோசனைக் குழுவின் 3ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று(06) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மற்றும் முன்னாள் டெஸ்ட் அணி வீரரும், ஐ.சி.சியின் முன்னாள் போட்டி நடுவருமான ரொஷான் மஹானாம ஆகியோர் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் ஒருநாள் குழாம் அறிவிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள…
இவ்விசேட சந்திப்பின் போது பாடசாலை கிரிக்கெட்டில் பல வருடங்களாக நிலவி வருகின்ற குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பாடசாலை கிரிக்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய உடனடி அபிவிருத்திகள், பாடசாலை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு மற்றும் புதிய முறையிலான போட்டித் தொடர்கள் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய குறுங்கால மற்றும் நீண்டகால விசேட திட்டவரைபொன்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசம் இதன்போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
”இவ்விசேட குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குறுங்கால மற்றும் நீண்டகால திட்டவரைபுகளை மிகவும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பாடசாலை மட்ட கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த குறிப்பிட்ட காலப்பகுதியொன்றையும் அறிவிக்க எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.
அதிலும் குறிப்பாக பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு அத்தியவசியமாக உள்ள வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கும் அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், மிக விரைவில் பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்காக முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரினதும் பங்குபற்றலுடன் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி நாட்டு மக்களை தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.