13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி ஒட்டுமொத்த சம்பியனான தெரிவாகியதுடன், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி அதிக தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
முன்னதாக 1991ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர் அணி 15 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (07) நிறைவுக்கு வந்தது.
மெய்வல்லுனர் போட்டிகளின் 5 ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், இதில் நடைபெற்ற 8 போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
SAG மெய்வல்லுனரில் 2ஆவது பதக்கத்தை தவறவிட்ட சண்முகேஸ்வரன்
நேபாளத்தில் நடைபெற்று வருகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில்…
இதன்படி, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அமெரிக்கா வாழ் இலங்கை வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன பெற்றுக் கொடுத்தார்.
பெண்களுக்கான அரைமரதன் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான ஹிருனி விஜேரத்ன பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தாலும், இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமையைத் தேடிக் கொடுத்தார்.
35 வருடகால தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை பெற்றுக் கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
கடும் குளிருக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய இப்போட்டியில் ஹிருனி சுகயீனத்துடன் களிமறங்கியிருந்தார்.
எனினும், 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இப்போட்டியில் அவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 2 மணித்தியாலங்கள் 41.24 செக்கன்களில் எடுத்துக் கொண்டார்.
இறுதியாக 1999ஆம் ஆண்டு இதே கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான மரதனில் டி.ஏ இனோகா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இப்போட்டியில் நேபாள வீராங்கனை புஷ்பா பண்டாரி வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ஜோதி கவாதி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.
இதேநேரம் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர்களான பிரதீப் தம்மிக மற்றும் சிசிர குமார ஆகிய இருவரும் முறையே 5ஆவது, 6ஆவது இடங்களைப் பெற்றுக்கொள்ள, பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் பங்குகொண்ட மற்றுமொரு இலங்கை வீராங்கனையான மதுமாலி பெரேரா 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
>>Photos: Day 07 | South Asian Games 2019<<
இந்துனில், டில்ஷி தங்கம்
ஆண்களுக்கான 800 மீற்றரில் இலங்கையின் இந்துனில் ஹேரத் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 50.52 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 800 மீற்றரில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதேநேரம், பெண்களுக்கான 800 மீற்றரில் இலங்கை வீராங்கனை டில்ஷி குமாரசிங்க தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 400 மீற்றரில் மாற்று வீராங்கனையாகக் களமிறங்கி தங்கப் பதக்கம் வென்ற அவர், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 2 நிமிடங்களும் 06.18 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
இதேநேரம், டில்ஷியுடன் போட்டியிட்ட 800 மீறறர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான கயன்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் போட்டியை 2 நிமிடங்களும் 08.52 செக்கன்களில் நிறைவு செய்தார்.
SAG 4×100 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு இரட்டைத் தங்கம்
நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13ஆவது…
நதீஷாவுக்கு முதல் பதக்கம்
இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இறுதி நேரத்தில் இலங்கை அணியில் இடம்பிடித்த நதீஷா தில்ஹானி பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டியில் அவர் 55.02 மீற்றர் தூரத்தை எறிந்தார்
இதேநேரம், ஈட்டி எறிதலில் தேசிய சம்பியனான நதீகா லக்மாலி, 54.41 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதியாக இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் நட்சத்திர வீரர் சுமேத ரணசிங்க வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 74.97 மீற்றர் தூரத்தை எறிந்தார்.
குறித்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் (86.29 மீற்றர்) புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இவர் இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SAG – முப்பாய்ச்சலில் பதக்கம் வென்ற சப்ரின் : இலங்கைக்கு மேலும் 4 தங்கங்கள்
தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாவது…
அஞ்சலோட்டத்தில் இரட்டை தங்கம்
மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நிகழ்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீற்றர் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணிகள் ஆண், பெண் இருபாலாரிலும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தன.
ஆண்களுக்கான அஞ்சலோட்டம் முதலில் நடைபெற்றது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் முதல் 400 மீற்றரை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அருண தர்ஷன ஓடினார். 6 நாடுகள் பங்குகொண்ட இப்போட்டியில் மிகவும் கடினமான 6ஆவது சுவட்டில் அருண ஓடி முதல் வீரராக வந்தார்.
எனினும், 2ஆவது மற்றும் 3ஆவது கோல் பரிமாற்றங்களில் இலங்கை அணி சற்று தடுமாற்றத்தை சந்திக்க இந்திய வீரர்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி முன்னிலை பெற்றனர்.
ஆனால் அந்த சவாலை இறுதி வீரராக ஓடி லாவகமாக முறியடித்த லக்மால் ப்ரியன்த உள்ளிட்ட இலங்கை குழாம் போட்டியை 03 நிமிடங்களும் 08.04 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
இதேவேளை, பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிட்டியது.
ஓமாயா உதயங்கனி, கயன்திகா அபேரத்ன, கௌஷல்யா லக்மாலி, டில்ஷி குமாசிங்க ஆகியோர் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை பெண்கள் குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் முதலாவது 400 மீற்றரை ஓடிய ஒமாயா உதயங்கனி சற்று தாமதமாக போட்டியை நிறைவுசெய்தததால் 2ஆவது கோல் பரிமாற்றத்தை எடுத்த கயன்திகா சற்று பின்னடைவை சந்தித்தார்.
எனினும், 3ஆவது கோல் பரிமாற்றத்தை எடுத்த கௌஷல்யா லக்மாலி பலத்த போட்டியைக் கொடுத்து இரண்டாவது வீராங்கனையாக வந்து அதை டில்ஷியிடம் கொடுத்தார்.
800 மீற்றர் இறுதிப் போட்டியை ஓடிமுடித்து ஒரு மணித்தியாலம் செல்வதற்குள் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் களமிறங்கிய 20 வயதுடைய இளம் வீராங்கனையான டில்ஷி குமாரசிங்க முதல் 200 மீற்றரில் இரண்டாவது வீராங்கனையாக சற்று இடைவெளியுடன் ஓடி வந்தார்.
ஆனால், இறுதி 200 மீற்றரில் தனது வேகத்தை அதிகரித்த டில்ஷி, முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் டில்ஷி குமாரசிங்க பெற்றுக்கொண்ட 3ஆவது தங்கப் பதக்கமாக இது இது பதிவாகியது.
>>Photos: Day 5 | South Asian Games 2019<<
இலங்கைக்கு முதலிடம்
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் களமிறங்கிய இலங்கை மெய்வல்லுனர் அணி ஒட்டுமொத்தமாக 15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உள்ளட்டங்கலாக 34 பதக்கங்களை வென்று அசத்தியது.
இதன்படி, 1991ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெற்றுக்கொண்ட 15 தங்கப் பதக்கங்களை இம்முறை போட்டிகளில் இலங்கை மெய்வல்லுனர்கள் சமப்படுத்தியிருந்தனர்.
இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணி 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 37 பதக்கங்களை வெற்றி கொண்டடிருந்தது.
அத்துடன், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்தது. 4 தங்கப் பதக்கங்களை பாகிஸ்தான் 3ஆவது இடத்தையும், 3 தங்கப் பதக்கங்களை வென்ற நேபாளம் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இதேவேளை, இம்முறை மெய்வல்லுனர் போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க 3 தங்கப் பதக்கங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, நிலானி ரத்னாயக்க, லக்ஷிகா சுகன்தி, சாரங்கி சில்வா மற்றும் அருண தர்ஷன ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களையும் வெற்றி கொண்டனர்.
>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<