இலங்கை ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு அபார வெற்றிகள்

74

தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) T20 கிரிக்கெட் தொடரில் இன்று (4) நடைபெற்ற போட்டிகளில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 173  ஓட்டங்களால் பூட்டானை வீழ்த்த, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மாலைத்தீவினை 249 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது. 

ஆடவர் கிரிக்கெட் 

நேற்று (3) தமது முன்னைய போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியிருந்த இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி அதே நம்பிக்கையுடன் பூட்டான் அணியினை தமது இரண்டாவது மோதலில் எதிர்கொண்டது.

SAG கிரிக்கெட்: சம்மு அஷானின் அதிரடியோடு இலங்கை வெற்றி

நேபாளத்தின் கத்மண்டுவில் இடம்பெறும் தெற்காசிய விளையாட்டு விழாவின் T20…

கிர்த்திப்புரில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பூட்டான் அணி இலங்கை வீரர்களை முதலில் துடுப்பாட பணித்தது.

அதன்படி இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணிக்கு  பெதும் நிஸ்ஸங்க மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் அதிரடி அரைச்சதங்கள் பெற்றுக் கொடுத்தனர். இவர்களின் அரைச்சத உதவிகளுடன் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பெற்ற பெதும் நிஸ்ஸங்க 48 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 76 ஓட்டங்கள் குவிக்க, நிஷான் மதுஷ்க 38 பந்துகளுக்கு 65 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

இதேநேரம், பூட்டான் அணியின் பந்துவீச்சில் தின்லேய் ஜம்சோ, கர்மா டோஜி, டொப்டேன் சிங்கியே மற்றும் டென்சின் வங்ஜூக் ஜூனியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 249 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பூட்டான் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது. 

போட்டியின் வெற்றி இலக்கை அடைவதில் ஆரம்பத்தில் இருந்தே போராட்டம் காண்பித்த பூட்டான் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தது. 

>>இலங்கை கிரிக்கெட் விருதுகளில் மாலிங்க, திசர, சமரிக்கு அதிக விருதுகள்!

பூட்டான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரன்ஜூங் மிக்யோ டோர்ஜி 22 ஓட்டங்களுடன் தனது தரப்பில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார். இதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சில் சசிந்து கொலம்பகே மற்றும் ஜெஹான் டேனியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ஆடவர் – 248/4 (20) பெதும் நிஸ்ஸங்க 76(48), நிஷான் மதுஷ்க 65(38), தின்லே ஜம்சோ 33/1(3)

பூட்டான் ஆடவர் – 75 (18.4) ரன்ஜூங் மிக்யோ டோர்ஜி 22(15), ஜெஹான் டேனியல் 8/2(3), சசிந்து கொலம்பகே 6/2(2)

முடிவு – இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 173 ஓட்டங்களால் வெற்றி 

மகளிர் கிரிக்கெட் 

தெற்காசிய விளையாட்டு விழாவில் தமது முதல் போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்த நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்து மாலைத்தீவு அணியை எதிர்கொண்டது.

போக்காராவில் ஆரம்பமாகிய போட்டியில் முதலில் துடுப்பாடிய  இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை எடுத்து இந்த தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களையும் பதிவு செய்தது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி ஹர்சித மாதவி சதம் தாண்டியதுடன் வெறும் 47 பந்துகளுக்கு 15 பெளண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், ஹர்சிதா மாதவியுடன் இணைந்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கிய சத்யா சந்தீப்பனி 48 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மாலைத்தீவு அணியின் பந்துவீச்சு சார்பில் ஷம்மா அலி, லட்சா ஹலீமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து ஆறுதல் தந்திருந்தனர்.

>>நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் கடினமான 280 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மாலைத்தீவு அணி வெறும் 30 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் மோசமான தோல்வியினை தழுவியது.

மாலைத்தீவு துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவர் கூட ஈரிலக்க ஓட்டங்கள் பெறாத நிலையில், ஜனதி அனாலி 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும்,  சத்யா சந்தீப்பனி 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் – 279/2 (20) ஹர்சித மாதவி 106(47)*, சத்யா சந்தீப்பனி 96(48)*, ஷம்மா அலி  57/1(4) 

மாலை தீவு மகளிர் – 30 (14.5) ஜனதி அனாலி 2/3 (1.5), சத்யா சந்தீப்பனி 13/2(4)

முடிவு – இலங்கை மகளிர் 249 ஓட்டங்களால் வெற்றி 

>>SAG செய்திகளைப் படிக்க<<