இறுதி காற்பகுதியில் அபாரம் காண்பித்து பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை!

South Asian Basketball Association Championship 2021

413
 

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் இன்று (15) இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில், பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு விளையாடியிருந்தது.

குறித்த இந்தப்போட்டியில், நடப்பு சம்பியனாக களமிறங்கியிருந்த இலங்கை அணி, இறுதி காற்பகுதி நேரத்தில் மிகச்சிறப்பாக ஆடி 67-56 என்ற புள்ளிகள் கணக்கில் பங்களாதேஷை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.

>>SABA சவாலுக்காக பங்களாதேஷ் செல்லும் நடப்பு சம்பியன் இலங்கை!

போட்டியின் முதல் காற்பகுதியில் கடைசி நிமிடம் வரை இலங்கை அணி முன்னிலை வகித்த போதும், இறுதிநேரத்தில் ஒரு புள்ளியை பெற்ற பங்களாதேஷ் அணி 15-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது காற்பகுதியில் இரண்டு அணிகளும், சம பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன. இதில், சற்று ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை அணி, ஒரு புள்ளி பின்னடைவை தகர்க்க, முதற்பாதி நிறைவில் இரண்டு அணிகளும் 30-30 என சமப்புள்ளிகளை பெற்றன.

எனினும், மூன்றாவது காற்பகுதியில் பங்களாதேஷ் அணி, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி சற்று தடுமாறியது. மூன்றாவது காற்பகுதியின் மத்திய பகுதியில் 40-40 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டு அணிகளும் சமபலமாக இருந்த போதும், மூன்றாவது காற்பகுதியின் முடிவில் பங்களாதேஷ் அணி 45-41 என முன்னிலைப்பெற்றுக்கொண்டது.

எவ்வாறாயினும், அடுத்து ஆரம்பித்த போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி காற்பகுதியில், இலங்கை அணி வீரர்கள் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ச்சியாக பங்களாதேஷ் அணிக்கு அழுத்தம் கொடுத்து புள்ளிகளை பெற்றனர். இதன்காரணமாக, காற்பகுதியின் இடைவேளையின் போது இலங்கை வீரர்கள் 61-51 என முன்னிலையை பெற்றனர்.

தொடர்ந்தும் சிறப்பாக ஆடிய இலங்கை அணி நான்காவது காற்பகுதியில் 26 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், பங்களாதேஷ் அணி 11 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. எனவே, இறுதி காற்பகுதியில் அபாரம் காண்பித்த இலங்கை கூடைப்பந்து அணி 67-56 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.

இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில், இந்திய அணியை எதிர்வரும் 17ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

  • முதல் காற்பகுதி – பங்களாதேஷ் 15-14 இலங்கை
  • 2வது காற்பகுதி – பங்களாதேஷ் 30-30 இலங்கை
  • 3வது காற்பகுதி – பங்களாதேஷ் 45–41 இலங்கை
  • 4வது காற்பகுதி – இலங்கை 67–56 பங்களாதேஷ்
  • முடிவு – இலங்கை அணி 67-56 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<