சகீப் அல் ஹஸனின் சகலதுறை பிரகாசிப்பால் சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ்!

ICC Men’s T20 World Cup 2021

101
ICC

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்றின் குழு B இற்கான போட்டியில், பப்புவுா நியூ கினியா அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, அபார வெற்றியை பதிவுசெய்து சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது.

முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்தாலும், ஓமான் அணிக்கு எதிராக சிறந்த வெற்றியினையும், இன்றைய தினம் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் ஊடாக சுபர் 12 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு செல்ல அணிகள் என்ன செய்ய வேண்டும்??

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, மொஹமதுல்லாஹ் மற்றும் சகீப் அல் ஹஸனின் சிறந்த ஓட்டக்குவிப்புடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய மொஹமதுல்லாஹ் 28 பந்துகளில் 50 ஓட்டங்களையும், சகீப் அல் ஹஸன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன், லிடன் டாஸ் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பப்புவா நியூ கினியா அணியின் பந்துவீச்சில், கபுவா மோரியா, டேமின் ரவு, அசட் வாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூகினியா அணி, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறியது. குறிப்பாக சகீப் அல் ஹஸன் மற்றும் மொஹமட் சய்புதீன் ஆகியோரின் பந்துவீச்சு தடுமாறிய இந்த அணி, முதல் 7 விக்கெட்டுகளை 27 ஓட்டங்களுக்குள் இழந்தது.

குறைந்த ஓட்டங்களுக்கு பப்புவா நியூகினியா அணியை, பங்களாதேஷ் அணி ஆட்டமிழக்கச்செய்துவிடும் என்ற நிலை இருந்த போதும், பப்புவா நியூ கினியா அணியின் விக்கெட் காப்பாளர் கிப்லின் டொரிகா இறுதிவரை களத்தில் நின்று போராடினார். இவர், அணிக்காக அதிகபட்சமாக 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தாலும், 19.3 ஓவர்கள் நிறைவில், இந்த அணி 97 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணிசார்பாக சகீப் அல் ஹஸன் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, மொஹமட் சய்புதீன் மற்றும் டஸ்கின் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி இந்த போட்டியின் வெற்றியுடன் 4 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது. அதேநேரம், அவர்களின் ஓட்ட சராசரி +1.733 அதிகரித்துள்ள நிலையில், முதலிரண்டு இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

எனவே, சுப்பர் 12 சுற்றுக்கான தகுதியினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி, குறித்த சுற்றில் எந்த குழுவுக்கு செல்லும் என்பது உறுதிசெய்யப்படவில்லை.  தற்போது, நடைபெற்றுவரும் ஓமான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவின் அடிப்படையில், எந்த குழுவுக்கு முன்னேறும் என்பது உறுதிசெய்யப்படும்.

அதன்படி, குழு Bயின் முதலிடத்தை பிடித்தால், சுபர் 12 சுற்றில், குழு இரண்டிலும், இரண்டாவது இடத்தை பிடித்தால், குழு ஒன்றிலும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பங்களாதேஷ் அணிக்கு உள்ளது.

சுருக்கம்

பங்களாதேஷ் – 181/7 (20), மொஹமதுல்லாஹ் 50 (28), சகீப் அல் ஹஸன் 46 (37), கபுவா மோரியா 26/2, அசட் வாலா 26/2

பபுவா நியூ கினியா – 97/10 (19.3), கிப்லின் டொரிகா 46* (34), சகீப் அல் ஹஸன் 9/4

முடிவு – பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

>> Click here to view Full Scorecard