ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா

79
Image Courtesy - ICC

தென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 3 – 0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (6) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இப்போட்டியில் ஓய்வில் இருந்த தென் ஆபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு…

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி மீண்டும் ஒரு முறை தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் சிரமப்பட்டு 44 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. எனினும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களான பிரண்டன் டெய்லர் மற்றும் சோன் வில்லியம்ஸ் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் அணியை ஓரளவு நல்ல நிலைக்கு இட்டுச்சென்றது. இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஜிம்பாப்வே அணி சார்பாக சோன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும் பிரண்டன் டெய்லர் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய தென் ஆபிரிக்க வீரர்களான டேல் ஸ்டெயின் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்ததோடு பெஹ்லுக்வாயோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்போடு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் ஆபிரிக்க அணிக்கு மர்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆரம்பம் அணியின் வெற்றியை இலகுவாக்கியது. இருவரும் இணைந்து 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது மர்க்ரம் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹென்றிக்ஸ் 66 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீரரான க்லாசன் ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதம் கடந்து 59 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றி கைகூடியது. இறுதியில் அவ்வணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சில் த்ரிபானோ இரண்டு விக்கெட்டுகளையும் ஏனைய நான்கு பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.  

சாதனைகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச டி20 போட்டிகள் என முழுமையான கிரிக்கெட்…

இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆபிரிக்க அணி 3 – 0 என வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் க்லாசன் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் சிறந்த வீரராக அவ்வணியின் முன்னனி சுழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தெரிவானார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 228 (49.3) – சோன் வில்லியம்ஸ் 69, பிரெண்டன் டெய்லர் 40, டேல் ஸ்டெயின் 3/29, ககிசோ ரபாடா 3/32, அண்டைல் பெலுக்வாயோ 2/34, இம்ரான் தாஹிர் 2/44.

தென் ஆபிரிக்கா – 231/6 (45.5) – ரீஸா ஹென்றிக்ஸ் 66, ஹென்ரிச் க்லாசன் 59, எய்டன் மர்க்ரம் 42, த்ரிபானோ 2/35.

முடிவு – தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<