இம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்கா

250
2nd ODI (D/N), Zimbabwe tour of South Africa

தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (3) நடைபெற்றது. இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியை 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த தென் ஆபிரிக்க அணி 120 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

நேற்றைய இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி ஆரம்பத்தில் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் சிரமப்பட்டு ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் பின்வரிசை வீரர்களான பெஹலுக்வாயோ மற்றும் ஸ்டெயின் ஆகியோர் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆபிரிக்க அணி 47.3 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கு  சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

>> ஜிம்பாப்வே அணியை இலகுவாக வீழ்த்திய தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்க அணி சார்பாக ஸ்டெயின் ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தை பெற்று 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது தென் ஆபிரிக்க அணி சார்பாக 9 ஆம் இலக்க வீரர் அரைச்சதம் பெற்றுக்கொண்ட நான்காவது சந்தர்ப்பமாகும். அது தவிர மர்க்ரம் 35 ஓட்டங்களையும் பெஹ்லுக்வாயோ 28 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக டெண்டாய் சட்டாரா மூன்று விக்கெட்டுகளையும் ஜார்விஸ் , த்ரிபானோ மற்றும் மவுதா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

199 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி இம்ரான் தாஹிரின் சுழலுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறி 24 ஓவர்கள் நிறைவில் 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் ஹெட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இம்ரான் தாஹிர் பெற்றுக் கொண்ட முதலாவது ஹெட்ரிக் ஆகும். அத்தோடு ஒருநாள் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை புரிந்த நான்காவது தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர் எனவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

துடுப்பாட்டத்தில் ஜிம்பாப்வே அணித்தலைவர் ஹமில்டன் மசகட்ஸா 27 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதோடு ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தனர்.

>> முத்தரப்பு தொடருக்காக இந்தியா செல்லும் இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணி

இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சகலதுறையிலும் பிரகாசித்த தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 198  (47.3) – டேல் ஸ்டெயின் 60, எய்டன் மர்க்ரம் 35, அண்டைல் பெஹ்லுக்வாயோ 28, சட்டாரா 42/3,  ஜார்விஸ் 26/2

ஜிம்பாப்வே – 78 (24) – ஹமில்டன் மசகட்ஸா 35, இம்ரான் தாஹிர் 24/6, டேல் ஸ்டெயின் 19/2

போட்டி முடிவு – தென் ஆபிரிக்க அணி 120 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<