டு ப்ளெசிஸின் சதத்துடன் தென்னாபிரிக்க அணிக்கு இலகு வெற்றி

879

இலங்கை அணிக்கு எதிராக ஜொஹன்னெஸ்பேர்க்கில் உள்ள வொண்டரஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸின் அபார சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. அத்துடன், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

உத்திகளிளை மாற்றியதே சிறந்த ஆட்டத்திற்கு காரணம்: திசர பெரேரா

கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவுகளை சில ஓவர்களுக்குள்ளேயே மாற்றும் வல்லமை…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் அறிமுக வீரராக ஓஷத பெர்னாண்டோ களமிறக்கப்பட தென்னாபிரிக்க அணியில் அறிமுக வீரராக என்ரிச் நொர்ட்ஜே களமிறக்கப்பட்டார்.

இலங்கை அணி

நிரோஷன் டிக்வெல்ல, உபுல் தரங்க, ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனன்ஜய டி சில்வா, திசரபெரேரா, அகில தனன்ஜய, விஷ்வ பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், லசித் மாலிங்க

தென்னாபிரிக்க அணி

குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன், பாப் டு ப்ளேசிஸ், டேவிட் மில்லர், வியான் முல்டர், டுவைன் ப்ரோட்டியர்ஸ், லுங்கி ன்கிடி, என்ரிச் நொர்ட்ஜே, ககிஸோ றபாடா, இம்ரான் தாஹிர்

தென்னாபிரிக்க அணியின் பணிப்பின்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, தடுமாற்றத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. நிரோஷன் டிக்வெல்ல 8 ஓட்டங்களுடனும், உபுல் தரங்க 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 23 ஓட்டங்களுக்கு தங்களுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இழந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்புக்கு பின்னர் குசல் பெரேராவுடன் இணைந்த அறிமுக துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ சிறந்த ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் மிகச்சிறந்த ஓட்டவேகத்துடன், இலங்கை அணியை திடமான நிலைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், ஆட்டத்தில் முதன்முறையாக சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் பந்து வீச அழைக்கப்பட, குசல் பெரேரா (33), குயிண்டன் டி கொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரது ஆட்டமிழப்பை தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஓஷத பெர்னாண்டோ தனது கன்னி அரைச்சதத்தை நெருங்கிய நிலையில், துரதிஷ்டவசமாக ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். ஓசத பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஓசத பெர்னாண்டோவின் விக்கெட் வீழ்த்தப்பட்டதையடுத்து, இலங்கை அணியின் ஓட்டவேகம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் நிதானமாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடி, ஆட்டத்தின் பிற்பகுதியில் அதிரடியை வெளிப்படுத்தியது. இதில், குசல் மெண்டிஸ் அரைச்சதம் கடக்க, இருவரும் இணைந்து 94 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும், இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி, தனன்ஜய டி சில்வாவின் (39) விக்கெட்டினை கைப்பற்றினார்.

>>Photos: Sri Lanka Vs South Africa -1st ODI<<

தனன்ஜய டி சில்வாவின் ஆட்டமிழப்பின் பின்னர், குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்ப, அடுத்து வந்த திசர பெரேரா, அகில தனன்ஜய மற்றும் சந்தகன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, லசித் மாலிங்க இறுதி நேரத்தில் 15 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதன்படி, இலங்கை அணி 47 ஓவர்கள் நிறைவில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் அபாரமாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 14 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரீஸா ஹென்ரிக்ஸ் (01), விஷ்வ பெர்னாண்டோவின் பந்து வீச்சில், டிக்வெல்லவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

எனினும், இவரது ஆட்டமிழப்பின் பின் ஜோடி சேர்ந்த குயிண்டன் டி கொக் மற்றும் அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் ஆகியோர் இலங்கை அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர். இதற்கிடையில் திசர பெரேரா இலங்கை அணியின் 8 ஆவது ஓவரை வீசிய போது பாப் டு ப்ளெசிஸை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிட்டியது.  இந்த ஓவரில் அடுத்தடுத்து மூன்று பௌண்டரிகளை டு ப்ளெசிஸ் விளாசிய நிலையில், இறுதிப் பந்தில் அவரை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பொன்றை திசர பெரேரா ஏற்படுத்தினார். எனினும், இலகுவான பிடியெடுப்பை லக்ஷான் சந்தகன் தவறவிட போட்டியின் சாதகத்தன்மை முற்றாக தென்னாபிரிக்க அணியின் பக்கம் திரும்பியது.

குயிண்டன் டி கொக் மற்றும் டு ப்ளெசிஸ் ஆகியோர் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கும் இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இலகுவாக ஓட்டங்களை குவித்த இருவரும் அரைச்சதத்தை கடந்தனர். இதனையடுத்து இருவரும் 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, டி கொக் 81 ஓட்டங்களுடன் அகில தனன்ஜயவின் பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், தொடர்ச்சியாக களத்தில் இருந்த டு ப்ளெசிஸ், தனது 11 ஆவது ஒருநாள் சதத்தை கடந்து, வென் டெர் டஸனுடன் துடுப்பெடுத்தாடினார். இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக 82 ஓட்டங்களை பகிர்ந்து தென்னாபிரிக்க அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

உலகக்கிண்ண வாய்ப்பு கிட்டுமா? – மனம் திறந்தார் உபுல் தரங்க

இலங்கை அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க…

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய டு ப்ளெசிஸ் 114 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை குவிக்க, வென் டெர் டஸன் 43 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இறுதியில் தென்னாபிரிக்க அணி 38.5 ஓவர்கள் நிறைவில் 232 ஓட்டங்களை பெற்று இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இதேவேளை, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 6ஆம் திகதி செஞ்சூரியனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<