மொயின் அலியின் சகலதுறை ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி

325
Image courtesy -Independent.co.uk

மொயின் அலியின் சிறந்த சகலதுறை ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 177 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் 3-1 என கைப்பற்றியது.

இதன்மூலம், இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் 1998ஆம் ஆண்டுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணியை டெஸ்ட் தொடரொன்றில் வென்றுள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்க அணி கடந்த பத்து ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை தோற்றது இது இரண்டாவது முறையாகும்.

மொயின் அலியின் ஹட்ரிக்குடன் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 239 ஓட்டங்களால் அபார வெற்றி…

மன்செஸ்டர், ஓல்ட் டிரபட் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமான இப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 362 ஓட்டங்களை எடுத்தது. குறிப்பாக ஜொன்னி பஸ்டோ பரிதாபமாக 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டி ஒன்றில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கும் முதல் வீரர் பஸ்டோ ஆவார். கடைசியாக 2014 இல் ஆஸி. வீரர் ஷோன் மார்ஷ் இவ்வாறு சதத்தை தவறவிட்டார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 226 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணியில் ஒரு வீரர் கூட அரைச் சதமும் எட்டவில்லை.  

முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் மொயின் அலியின் கடைசி வரிசை துடுப்பாட்டத்தால் வலுவான நிலையை அடைந்தது. இங்கிலாந்து அணி 153 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது களமிறங்கிய அலி, கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றது.

எனினும், ஆட்டமிழக்காது கடைசிவரை களத்தில் இருந்த அலி 66 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 380 என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  

ஆட்டத்தின் நான்காவது நாளான திங்கட்கிழமை (07) இந்த வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி முதல் 3 விக்கெட்டுகளையும் 40 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தபோதும் ஹஷிம் அம்லா மற்றும் அணித்தலைவர் டு ப்லெசிஸ் ஆகியோர் 4ஆவது விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நம்பிக்கை தந்தனர்.

அப்போது 83 ஓட்டங்களுடன் சிறப்பாக ஆடி வந்த அம்லாவை, மொயின் அலி வீழ்த்தியது தொடக்கம் தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மறுமுனையில் நிதாமனமாக ஆடி வந்த டு ப்லெசிஸ் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மொயின் அலி கடைசி வரிசை விக்கெட்டுகளை தொடர்ச்சியாக சாய்க்க தென்னாபிரிக்கா 202 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மெதிவ்ஸ் பந்துவீசாதது பெரும் இழப்பு – சந்திமால்

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இணைக்கப்பட்ட…

தென்னாபிரிக்க அணியின் கடைசி ஏழு விக்கெட்டுகளும் வெறுமனே 39 ஓட்டங்களுக்குள் பறிபோனது அவ்வணிக்கு அவமானத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.  

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்டில் ஹட்ரிக் விக்கெட் பெற்று போட்டியை வென்று கொடுத்த அலி, கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தினார்.  19.5 ஓவர்கள் பந்து வீசிய அவர் 69 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

மொயின் அலி இங்கிலாந்து அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டத்துடனேயே இந்த டெஸ்ட் தொடருக்கு தேர்வானார். ஆனால், அவர் இந்த தொடரில் துடுப்பாட்டத்தில் 252 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை.

இதன்மூலம் நான்காவது டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதை வென்ற மொயின் அலி தொடர் நாயகனாகவும் தேர்வானார்.