மெதிவ்ஸ் பந்துவீசாதது பெரும் இழப்பு – சந்திமால்

1611
Mathews not bowling is a big loss - Chandimal

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இணைக்கப்பட்ட ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரும் காயத்துக்கு உள்ளான நிலையில் அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீசாதது இலங்கை அணிக்கு மிகப் பெரிய இழப்பு என்று இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டார்.

கொழும்பு, SSC மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்த காரணத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ஓட்டங்களை பெறுவதற்கு சாதகமாக இருந்தது.

இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியுடன் தொடரையும் இழந்தது இலங்கை

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும்..

இலங்கை அணி நான்கு விசேட சுழல்பந்து வீச்சாளர் மற்றும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடனேயே களமிறங்கியது. எனினும் வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு வெளியேறியது, இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இல்லாத நிலையை ஏற்படுத்தியது. அதனை சரிசெய்ய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஒரு சில ஓவர்கள் மிதவேகப்பந்து வீசவேண்டி ஏற்பட்டது.

“ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை இணைத்துக் கொண்டாலேயே அணி சமநிலையில் இருக்கும் என்று நாம் காருதினோம். அதுவே எமது திட்டமாக இருந்தது. துரதிஷ்டவசமாக அவர் (நுவன் பிரதீப்) காயமடைந்தது எமக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

அப்போது பந்துவீச்சு வரிசையில் ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா என்று இரு அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்தார்கள். எமக்கு இருந்த ஆடுகளமும் சுழல்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என்று நாம் நம்பினோம். எனினும் எமது திட்டங்களை நாம் போட்டியில் சரியாக செயற்படுத்தவில்லை” என்று போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் சந்திமால் கூறினார்.  

தனது காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக சுகம் பெறாத அஞ்செலோ மெதிவ்ஸ் பந்து வீசுவதற்கு இன்னும் தயாராகவில்லை. அவர் பந்துவீசக்கூடாது என்று இலங்கை அணி உடற்பயிற்சியாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மெதிவ்ஸ் பந்துவீசாதது பற்றி சந்திமாலிடம் கேட்கப்பட்டபோது, “சரியான அணியொன்றை தயார்படுத்த எதிர்பார்க்கும்போது இது ஒரு மிகப்பெரிய இழப்பாகும். (அவர் பந்துவீசாதது) அணிக்கு பெரிய இழப்பு” என்றார்.  

இலங்கை அணி SSC ஆடுகளத்திற்கு ஏற்ப திட்டம் வகுத்தே போட்டிகான அணியில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. ஆட்டத்தின் முதல் நாளில் இந்திய அணி துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும்போது, இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான ரவிசந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் சோபித்தனர்.

“முதல் ஒன்றரை தினங்களில் நாம் நினைத்ததை விட ஆடுகளம் அதிகம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது எமக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவே நாம் போட்டியில் தோற்க காரணமானது. ஏனென்றால் நாம் முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்கே விக்கெட்டுகளை பறிகொடுத்தோம்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.

இலங்கை அணி எதிர் வரும் சனிக்கிழமை பல்லேகலேயில் இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடனான எஞ்சிய போட்டிகள் குறித்து சந்திமால் கூறியதாவது,

“எமக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. நாம் அனைத்து போட்டிகளையும் வெல்ல முயற்சிப்போம். அடுத்து சில தினங்களில் அதிக நேரம் மற்றும் சக்தியை பயிற்சிக்காக செலவு செய்வோம். இவ்வாறான பலம் மிக்க அணியொன்றுக்கு எதிராக எம்மால் ஒரு போட்டியிலேனும் வெல்ல முடியுமாக இருந்தால் எமது மனநிலையை உற்சாகப்படுத்த போதுமாக இருக்கும். அவர்கள் (இந்தியா) உலகின் முதல்நிலை அணியாக உள்ளனர்” என்றார் சந்திமால்.