இலங்கை A அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஷின் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க A அணி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை நெருங்கியுள்ளது.
தென்னாபிரிக்க A அணி இன்றைய தினம் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருந்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஷின் சதம் மற்றும் கீகன் பீடர்சனின் அரைச்சதத்தின் உதவியுடன் ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இரண்டாவது நாளான இன்று 257/8 ஓட்டங்களுடன் தங்களுடைய துடுப்பாட்ட இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இவருடன் இணைப்பாட்டத்தை பகிர்ந்த மிலான் ரத்நாயக்க 35 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.
ரமேஷ் மெண்டிஸ் மற்றும் மிலான் ரத்நாயக்கவின் போராட்டத்தின் உதவியுடன் 290 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழக்க, பந்துவீச்சில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க A அணியின் முதல் 2 விக்கெட்டுகளும் 15 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ வீழ்த்தியிருந்தார்.
எனினும் இதனைத்தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஷ் மற்றும் கீகன் பீட்டர்சன் 3வது விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் பீட்டர்சன் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய ஸ்டப்ஷ் தன்னுடைய சதத்தை பதிவுசெய்தார்.
டிரிஸ்டன் ஸ்டப்ஷ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதத்தை கடந்த நிலையில் 117 ஓட்டங்களை பெற்றிருந்த போது, விஷ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஷுபைர் ஹம்ஷா 45 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கெயல் வெரைன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணி ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லக்சித மானசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், தென்னாபிரிக்க A அணியானது இலங்கை A அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை விட 3 ஓட்டங்களால் பின்னடைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.