தென்னாபிரிக்க A அணிக்கு எதிராக இன்று (19) திங்கட்கிழமை ஆரம்பித்த இரண்டாவது நான்கு நாள் போட்டியில் இலங்கை அணி முதல் நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றியை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு நிசான் மதுஷ்க மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றை பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணிக்கு நேர்த்தியான ஆரம்பம் கிடைத்திருந்தாலும், நிசான் மதுஷ்க (33) மற்றும் லசித் குரூஸ்புள்ளே (27) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து மினோத் பானுக மற்றும் பசிந்து சூரியபண்டார ஆகியோர் மற்றுமொரு இணைப்பாட்டத்தை மூன்றாவது விக்கெட்டுக்காக கட்டியெழுப்பினர். இவர்களின் இணைப்பாட்டத்துடன் போட்டியில் மழைக்குறுக்கிட்டிருந்தது.
எனினும் பின்னர் ஆரம்பமான இந்தப் போட்டியில் 41 ஓட்டங்களை பெற்றிருந்த சூரியபண்டார ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து மினோத் பானுக 31 ஓட்டங்களுடன் வெளியேறினார். இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து லஹிரு உதார 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதன்மூலம் 217 ஓட்டங்களுக்கு இலங்கை அணி தங்களுடைய 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
எவ்வாறாயினும் முதல் போட்டியில் அரைச்சதம் கடந்திருந்த ரமேஷ் மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் மிலான் ரத்நாயக்க சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார்.
இன்றைய ஆட்டநேர நிறைவு வரை இவர்கள் இருவரும் களத்தில் நின்று துடுப்பெடுத்தாடியதுடன் ரமேஷ் மெண்டிஸ் 38 ஓட்டங்களையும், மிலான் ரத்நாயக்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். இதன் மூலம் இலங்கை A அணி 66 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய செனுரன் முத்துசாமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.