ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்த தயார்

Asia Cup 2022

568
SLC Very Confident of Hosting Asia Cup

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதியாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல வாரங்களாக நிலவிய அரசியல் அமைதியின்மைக்குப் பிறகு, நாடு தற்போது பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. எவ்வாறாயினும், ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையில் ஆசிய கிண்ணத்தை நடத்துவது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படுமா என்பது தொடர்பில் ஆசிய கிரிக்கெட் பேரவை இன்று (15) இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா ESPN Cricinfo இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,

“சமீபத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். குறிப்பாக, நாட்டில் தொடர்ந்து அமைதியின்மை சூழல் இருந்த போதிலும், கிரிக்கெட் விளையாட்டு பாதுகாப்பாக நடைபெற்றது. அதேபோல, பாகிஸ்தான் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (16) காலியில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன் கொழும்பில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்றிலும் பாகிஸ்தான் அணி விளையாடியது.

மேலும் தற்போதுள்ள அரசியல் நெருக்கடியால் தமது அணியோ, வீரர்களோ பாதிக்கப்படவில்லை என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியது.

இலங்கையில் ஆசிய கிண்ணத்தை நடத்துவதில் எங்களுக்கு இன்னும் வலுவான நம்பிக்கை உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தத் தொடரில் இருந்து விலகுவதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைக்கு அவ்வாறான எந்தவொரு அழுத்தங்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.

15ஆவது ஆசிய கிண்ணம் இம்முறை T20I வடிவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டித் தொடரில் நடப்புச் சம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்பவற்றுடன் தகுதிச்சுற்று மூலம் தெரிவாகும் அணி என மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதேவேளை, ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளதுடன், இதில் ஹொங்கொங், குவைட், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட அணிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<