குணதிலக்கவின் அபார துடுப்பாட்டத்தால் தம்புள்ளைக்கு வெற்றி

892

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கண்டி அணிக்கு எதிரான SLC டி-20 போட்டியில் 6 ஓட்டங்களால் மற்றொரு வெற்றியை பெற்ற தம்புள்ளை அணி இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

மறுபுறம் கடைசி ஓவர் வரை போராடியும் எந்த வெற்றியும் இல்லாமல் தொடர்ந்து நான்காவது போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கும் கண்டி அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

தோல்வியுறாத அணியாக T20 லீக்கில் முன்னேறும் கொழும்பு அணி

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் தசுன் ஷானக்க தலைமையிலான கண்டி அணி தம்புள்ளை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. தம்புள்ளை அணி சகலதுறை வீரர் இசுரு உதான தலைமையிலேயே இந்தப் போட்டியில் களமிறங்கி இருந்தது.  

இந்நிலையில் ஆரம்ப ஜோடியாக வந்த குணதிலக்க மற்றும் ரமித் ரம்புக்வெல்ல வேகமாக ஓட்டங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ரம்புவெல்ல, சரித் அசலங்க வீசிய நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பௌண்டரிகள் விளாச தம்புள்ளை அணியின் ஓட்ட எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்தது.

இந்த ஆரம்ப ஜோடி முதல் விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டது. ரம்புக்வெல்ல 24 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் தொடர்ந்து அதிரடியாக துடுப்பாடிய குணதிலக்க 54 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 87 ஓட்டங்களை பெற்றார். கடைசி நேரத்தில் தம்புள்ளை அணி சார்பில் வனிந்து ஹசரங்க மற்றும் இசுரு உதான இருவரும் ஆட்டமிழக்காது முறையே 14 மற்றும் 27 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தம்புள்ளை அணியின் ஓட்டங்கள் 200ஐ தாண்டியது.

இதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தம்புள்ளை அணி 217 ஓட்டங்களை பெற்று கண்டி அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்தது.

இதன் போது கண்டி அணி ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் தம்புள்ளை அணிக்கு நெருக்கடி கொடுக்க தவறியது. நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித் மாலிங்க தனது நான்கு ஓவர்களுக்கும் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் வெறும் 17 ஓட்டங்களில் சுருட்ட தம்புள்ளை அணியால் முடிந்தது. அனுபவ சுழற்பந்து வீச்சாளர் தில்ருவன் பேரேரா கண்டி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க இருவரும் அதிரடியாக துடுப்பாடி நம்பிக்கை தந்தனர். இவர்கள் 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொள்ள கண்டி அணி 10 ஓவர்களில் 113 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது 24 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றிருந்த அசலங்க ஆட்டமிழந்தபோதும் அணித்தலைவர் தசுன் ஷானக்க வெற்றிக்காக போராடினார். எனினும் மறுமுனையில் தனஞ்சய லக்ஷான் 9 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மலிந்த புஷ்பகுமார பந்தை உயர்த்தி அடிக்க முயன்று 6 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்னவின் அதிரடியோடு காலி அணிக்கு த்ரில்லர் வெற்றி

எனினும் தசுன் ஷானக்க தம்புள்ளை பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி ஓட்டங்களை குவித்தார். 19 பந்துகளுக்கு 45 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது ஷானக்க தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 46 பந்துகளுக்கு முகம்கொடுத்த ஷானக்க 5 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ஓட்டங்களை குவித்தார்.

ஷானக்கவின் விக்கெட் பறிபோனதை அடுத்து தம்புள்ளை அணியின் கடைசி எதிர்பார்ப்பு சிதறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் கண்டி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை எடுத்து வெற்றியை நூலிழையில் தவறவிட்டது.

குறிப்பாக கடைசி ஓவருக்கு கண்டி அணி 22 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிசல தாரக்க இரண்டு சிக்ஸர்களை விளாசி கடைசி பந்து வரை விறுவிறுப்பூட்டினார். 22 பந்துகளுக்கு முகம்கொடுத்த தாரக்க 3 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

முடிவு – தம்புள்ளை அணி 6 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<