இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்துள்ள T20 லீக் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று (10) கீரின்ஸ் அணியானது 5 விக்கெட்டுக்களால் க்ரேய்ஸ் அணிக்கெதிராக வெற்றியினைப் பெற்று அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறுகின்றது.
>>சாமிக்கவின் சகலதுறை ஆட்டத்தினால் கீரின்ஸ் அணிக்கு இலகு வெற்றி
கொழும்பு SSC மைதானத்தில் முன்னர் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கீரின்ஸ் அணியினர் முதலில் எதிரணிக்கு துடுப்பாட்டத்தினை வழங்கினர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய க்ரேய்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்கள் பெற்றது. அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிரோஷன் டிக்வெல்ல 37 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றார். கீரின்ஸ் அணிக்காக பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ் மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
>>சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் ரவி அஸ்வின்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 164 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கீரின்ஸ் அணி ஆரம்ப வீரரான லசித் குரூஸ்புள்ளேவின் விக்கெட்டினை அவர் 05 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இழந்தது. எனினும் அவ்வணிக்கு கமில் மிஷார மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் நம்பிக்கை வழங்க போட்டியின் வெற்றி இலக்கை கீரின்ஸ் அணியானது 5 விக்கெட்டுக்களை இழந்து 16.4 ஓவர்களில் அடைந்து கொண்டது.
கீரின்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த கமில் மிஷார 34 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுக்க, பானுக்க ராஜபக்ஷ 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக வெறும் 20 பந்துகளில் 38 ஓட்டங்கள் பெற்றார்.
க்ரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
க்ரேய்ஸ் – 163/6 (20) நிரோஷன் டிக்வெல்ல 52, கமிந்து மெண்டிஸ் 14/2
கீரின்ஸ் – 165/5 (16.5) கமில் மிஷார 52, விஜயகாந்த் வியாஸ்காந்த் 24/2




















