இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்களுக்கான T20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கீரின்ஸ் 23 ஓட்டங்களால் க்ரேய்ஸை வீழ்த்தியிருப்பதோடு, அங்குரார்ப்பண தொடரின் சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றது.
>>ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் தலைவராக நிகோலஸ் பூரன்<<
கொழும்பு SSC மைதானத்தில் முன்னர் ஆரம்பித்த T20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடரின் குழுநிலைப் போட்டிகளில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்ற, கீரின்ஸ் மற்றும் க்ரேய்ஸ் அணிகள் தெரிவாகின.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சரித் அசலன்க தலைமையிலான க்ரேய்ஸ் அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கீரின்ஸ் அணிக்கு வழங்கினார்.
இதன்படி முதலில் ஆடிய அவ்வணிக்கு குசல் மெண்டிஸ் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினார். அத்துடன் சதீர சமரவிக்ரம மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் சிறப்பாக ஆட கீரின்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்கள் பெற்றது. கீரின்ஸ் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் கமிந்து மெண்டிஸ் 23 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது எடுத்தார். அதேவேளை சதீர சமரவிக்ரம 29 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்றார். க்ரேய்ஸ் பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
>>மே.தீவுகள் செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி<<
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 190 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய க்ரேய்ஸ் அணியானது நிரோஷன் டிக்வெல்ல மூலம் சிறந்த ஆரம்பம் பெற்ற போதும், பின்னர் வெளிப்படுத்திய தடுமாற்றம் காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களையே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.
க்ரேய்ஸ் துடுப்பாட்டம் சார்பில் 28 பந்துகளில் நிரோஷன் டிக்வெல்ல 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றார். கீரின்ஸ் பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 3 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கீரின்ஸ் – 189/4 (20) குசல் மெண்டிஸ் 77, சதீர சமரவிக்ரம 49, கமிந்து மெண்டிஸ் 42*, வியாஸ்காந்த் 45/2
க்ரேய்ஸ் – 166/8 (20) நிரோஷன் டிக்வெல்ல 50, சாமிக்க கருணாரட்ன 24/3
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<