இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்திய பிரதான உள்ளூர் கழகங்கள் இடையிலான T20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய கொழும்பு கிரிக்கெட் கழகத்தை 6 ஓட்டங்களால் வீழ்த்தி NCC அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் இன்று (08) நடைபெற்ற இறுதிப் போட்டியில் NCC அணி துடுப்பாட்டம் பந்துவீச்சு என்று அனைத்து துறைகளிலும் சோபித்தபோதும், கொழும்பு கிரிக்கெட் கழக அணியும் கடைசி ஓவரில் கடைசி விக்கெட் வரை வெற்றிக்காக போராடியதால் பரபரப்பான இறுதிப் போட்டியாக மாறியது.

உள்ளுர் T20 போட்டிகளில் கலக்கும் மாலிங்க; NCC, CCC அணிகள் இறுதிப் போட்டியில்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தலைவர் அஷான் பிரியன்ஜன் NCC அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

இதன்படி துடுப்பாடிய NCC அணி 7 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பானுக்க ராஜபக்ஷ மற்றும் மஹேல உடவத்த எதிரணிக்கு வானவேடிக்கை காட்ட ஓட்டங்கள் உயர்ந்தன. இருவரும் இணைந்து 84 பந்துகளில் 126 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதில் ராஜபக்ஷ 51 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 79 ஓட்டங்களை குவித்தார். மறுபுறம் உடவத்த 50 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் NCC அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.   

இதன்போது லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் நுவன் துஷார கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் அபாரமாக செயற்பட்டார். சிறப்பாக பந்துவீசிய  அவர் தனது நான்கு ஓவர்களுக்கும் 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். T20 போட்டிகளில் இது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

பதிலெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் வெற்றி இலக்கை நோக்கி அந்த அணி கடைசி ஓவர் வரை முன்னேறியது. ஆரம்ப வீரர் சச்சித் பத்திரன 26 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசி நம்பிக்கை தந்தார். அவர் அணித்தலைவர் பிரியன்ஜனுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். பிரியன்ஜன் 24 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்றார்.

மத்திய வரிசையில் வந்த வனிந்து ஹசரங்கவும் அதிரடி காட்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் கடும் நெருக்கடி கொடுத்தது. 27 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 2 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களை குவித்தார்.

இறுதியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட் மாத்திரமே கைவசம் இருக்க கடைசி ஓவருக்கு 11 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. சாமிக்க கருணாரத்ன வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை முகம்கொடுத்த லஹிரு கமகே, அந்த பந்துக்கும் பௌண்டரி ஒன்றை விளாச கொழும்பு கிரிக்கெட் கழக ஓய்வறையில் கரகோசம் பெரிதாக ஒலித்தது.

எனினும் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி வந்த கருணாரத்ன அடுத்த பந்தில் ஓட்டம் விட்டுக் கொடுக்காமல், மூன்றாவது பந்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்தி NCC அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்று வெறும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அபாரமாக பந்துவீசிய கருணாரத்ன 3.3 ஓவர்களில் 28 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அதேபோன்று கொழும்பு கிரிக்கெட் கழக துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த லஹிரு குமார 4 ஓவர்களுக்கும் 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இம்முறை உள்ளூர் T20 தொடரில் கலக்கி வந்த லசித் மாலிங்க இறுதிப் போட்டியில் சோபிக்க தவறினார். அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோதும், தான் வீச முயன்ற யோக்கர் பந்துகள் இலக்கு தவறி புல்டோசாக விழுந்ததில் எதிரணி முக்கியமான தருணத்தில் ஓட்டங்கள் சேர்த்தது. மாலிங்க தனது 4 ஓவர்களுக்கும் 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

இலங்கை உள்ளூர் T-20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

2018 ஆம் ஆண்டின் உள்ளூர் கழங்கள் இடையிலான T20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மாலிங்க சக அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சதுரங்க டி சில்வாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் 8 போட்டிகளில் மொத்தம் தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

ஆரம்ப சுற்றில் மொத்தம் 23 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ருவின்து குணசேகர பதிவானார். கனடா தேசிய அணிக்கு ஆடும் குணசேகர ஐந்து போட்டிகளில் நான்கு அரைச்சதங்களோடு 272 ஓட்டங்களை பெற்றார். தொடரில் அவரது ஓட்ட சராசரி 136 என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

NCC – 183/7 (20) – பானுக்க ராஜபக்ஷ 79, மஹேல உடவத்த 68, நுவன் துஷார 4/32

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 177 (19.3) – சச்சித் பதிரண 47, வனிந்து ஹசரங்க 42, அஷான் பிரியஜன் 29, சானக்க கருணாரத்ன 4/28, லஹிரு குமார 3/31

முடிவு –  NCC அணி 6 ஓட்டங்களால் வெற்றி