மாகாண தொடரில் தம்புள்ளை அணிக்காக பந்துவீச்சில் அசத்திய லஹிரு கமகே

633

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள மாகாண ரீதியிலான “சுபர் -4” முதல் தர கிரிக்கெட் தொடரின் இரண்டாம் வாரப் போட்டிகளின்  மூன்றாம் நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்று முடிந்தது.

இளம் சிவப்பு நிறப்பந்து பயன்படுத்தப்பட்டு பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகின்ற இப்போட்டிகளின் இரண்டாம் நாளுக்கான ஆட்டம் திங்கட்கிழமை (09) சீரற்ற காலநிலையினால், முழுமையாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் நாளுக்கான (10) ஆட்டத்திலும் இரண்டு, மூன்று தடவைகள் ஏற்பட்ட காலநிலை சீர்கேட்டினால் குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்தன.

காலி எதிர் தம்புள்ளை

இலங்கை தேசிய அணி பந்துவீச்சாளர் லஹிரு கமகே இந்தப் போட்டியின் மூன்றாம் நாளுக்கான ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிக்காட்டியதுடன், அஷான் பிரியஞ்சன், குசல் மெண்டிஸ் மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஜொலித்திருந்தனர்.

தம்புள்ளை அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த குசல் மெண்டிஸ்

தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவருகின்ற இந்த போட்டியில் தம்புள்ளை அணியின் முதல் இன்னிங்சை (244) அடுத்து பதிலுக்கு தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பித்த காலி அணியினர், சீரற்ற காலநிலையினால் போட்டி தடைப்பட்ட போது 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். களத்தில் மாதவ வர்ணபுர 19 ஓட்டங்களுடனும், உபுல் தரங்க 8 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.

ஆட்டத்தின் மூன்றாம் நாளில் தம்புள்ளை அணியை விட 194 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த காலி அணியில், மாதவ வர்ணபுர லஹிரு கமகேவின் பந்துவீச்சுக்கு 21 ஓட்டங்களுடன் தொடக்கத்திலேயே வெளியேறினார்.

பின்னர் உபுல் தரங்கவின் துடுப்பாட்ட இன்னிங்சும் 25 ஓட்டங்களுடன் முடிவடைந்தது. எனினும், மத்திய வரிசையில் வந்த ரோஷேன் சில்வா, சத்துரங்க டி சில்வா ஆகியோர் பெறுமதியான ஓட்டங்களுடன் காலி அணிக்கு வலுச்சேர்த்தனர். இதன் காரணமாக, காலி அணி முதல் இன்னிங்சில் 65.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 255 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் அதிரடியான அரைச்சதம் ஒன்றுடன் சத்துரங்க டி சில்வா 45 பந்துகளுக்கு 54 ஓட்டங்களையும்  ரொஷேன் சில்வா 44 ஓட்டங்களையும் சேர்த்திருந்தனர்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சு சார்பாக லஹிரு கமகே 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி, இத்தொடரில் இரண்டாவது தடவையாக இப்படி ஒரு பதிவை நிலைநாட்டியதோடு சுழல் வீரரான ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர், 11 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த தம்புள்ளை அணியினர் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவின் போது 138 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். களத்தில் அரைச்சதம் தாண்டிய அஷான் பிரியஞ்சன் 67 ஓட்டங்களுடனும், சசித்ர சேரசிங்க 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

மூன்றாம் நாள் ஸ்கோர் விபரம்


கொழும்பு எதிர் கண்டி

கண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான இசுரு உதான மற்றும் கசுன் ராஜித ஆகியோரின் சிறப்பாட்டத்தினால், கொழும்பு அணியை விட 187 ஓட்டங்களால் கண்டி அணி முன்னிலை பெற்று போட்டியின் ஆதிக்கத்தை தம்வசத்தில் வைத்திருக்கின்றது.

மழையின் காரணமாக திங்கட்கிழமை (9) முழுமையாக தடைப்பட்டிருந்த இப்போட்டியின் இரண்டாம் நாளின் போது, கண்டி அணியின் முதல் இன்னிங்சை (270) அடுத்து துடுப்பாட களமிறங்கியிருந்த கொழும்பு அணி அவர்களது முதல் இன்னிங்சில் 37 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தனர். கொழும்பு அணி சார்பாக களத்தில் கெளஷால் சில்வா 9 ஓட்டங்களுடனும், ஷெஹான் ஜயசூரிய 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.

இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 237 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த கொழும்பு அணி கண்டி வீரர்களின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். கொழும்புத் தரப்பின் துருப்பு சீட்டு வீரர்களான அணித் தலைவர் தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி ஓய்வறை திரும்பியிருந்தனர். முடிவில் கொழும்பு அணி 43 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கெளஷால் சில்வா 26 ஓட்டங்களைப் பெற்றிருக்க, கண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

இதனை தொடர்ந்து 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த கண்டி அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் மஹேல உடவத்த 36 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.

மூன்றாம் நாள் ஸ்கோர் விபரம்

இரண்டு போட்டிகளினதும் நான்காம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடரும்.