இரண்டாவது இன்னிங்ஸ் அபாரத்துடன் சிலாபம் மேரியன்ஸ் அணி வலுவான நிலையில்

1102

பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான சுப்பர் 8 மற்றும் தட்டு பிரிவின் போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றன. கொழும்பு கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்களை அதிகரித்துக் கொண்டுள்ளது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

சிலாபம் மேரியன்ஸ் அணியின் 213 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் நேற்றைய தினம் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய தினமும் சிறப்பான பந்து வீச்சினை தொடர்ந்த அரோஷ் ஜனோத மற்றும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, கொழும்பு கிரிக்கெட் அணி 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய மாதவ வர்ணபுர 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

23 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் அபாரமாக துடுப்பெடுத்தாடி போட்டியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அசத்தலாக துடுப்பெடுத்தாடிய சச்சித்ர சேரசிங்க 93 ஓட்டங்களையும் விதுர அதிகாரி 87 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது காலத்தில் உள்ளனர். இதன்படி அவ்வணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 213 (55) – மதுக லியனபதிரனகே 40, லஹிரு கமகே 4/65

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (53.5) – மாதவ வர்ணபுர 71, அரோஷ் ஜனோத 3/19, மலிந்த புஷ்பகுமார 3/51

 சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 214/2 (67) – சச்சித்ர சேரசிங்க 93*, விதுர அதிகாரி 87*


SSC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

ராகம கிரிக்கெட் கழகம் பெற்றுக் கொண்ட 220 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய SSC அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி, கௌஷால் சில்வா மற்றும் சச்சித்ர சேனநாயக்கவின் உதவியுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. கௌஷால் 74 ஓட்டங்களையும், சச்சித்ர 77 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 220 (68.3) – அக்ஷு பெர்னாண்டோ 94, லஹிரு மிலந்த 40, விமுக்தி பெரேரா 5/33, கசுன் மதுஷங்க 3/51

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 332/9 (107) – சச்சித்ர சேனநாயக்க 77, கௌஷால் சில்வா 74, கவிந்து குலசேகர 42, சதுர பீரிஸ் 2/72, சஹன் நாணயக்கார 2/94


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம் (சுப்பர் 8)

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 192 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்ததுடன், அடுத்து துடுப்பெடுத்தாடிய NCC அணி 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்று முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது.

இன்றைய தினம் துடுப்பாட்டத்தை தொடர்ந்த NCC அணி சார்பில் 4 வீரர்கள் அரைச் சதம் கடக்க, அவ்வணி 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. NCC அணித் தலைவர் அஞ்சலோ பெரேரா அதிகபட்சமாக 71 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் அசத்திய தில்ருவன் பெரேரா 82 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

115 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த கோல்ட்ஸ் அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம 64 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மீண்டும் திறமையை வெளிக்காட்டிய லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192 (54) – பிரியமல் பெரேரா 43, லசித் எம்புல்தெனிய 6/63 

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 307 (80.3) – அஞ்சலோ பெரேரா 71, அனுக் பெர்னாண்டோ 62, திமிர ஜயசிங்க 54, ரமிந்து டி சில்வா 51, தில்ருவன் பெரேரா 6/82, நிசல தாரக 3/87

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 149/5 (48) – சதீர சமரவிக்ரம 64, லசித் எம்புல்தெனிய 3/36


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் (சுப்பர் 8)

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 174 ஓட்டங்களுக்கு சுருண்டதுடன், தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம் நேற்றைய தினம் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 157 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

இன்றும் அசத்தலான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய இராணுவ அணியின் நான்கு வீரர்கள் அரைச் சதங்களை பெற்றுக் கொள்ள, அவ்வணி 383 ஓட்டங்கள் குவித்து 209 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இராணுவ அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லியோ பிரான்சிஸ்கோ அதிகபட்சமாக 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் தமிழ் யூனியன் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜீவன் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தோல்வியை தவிர்த்துக் கொள்ள கடின முயற்சியை மேற்கொள்ள வேண்டிய நிலையில் களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இன்று ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 174 (43) – சாமிக கருணாரத்ன 61, யசோத மெண்டிஸ் 4/55, சீக்குகே பிரசன்ன 3/46

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 383 (107.1) – லியோ பிரான்சிஸ்கோ 77, சீக்குகே பிரசன்ன 69, டில்ஷான் டி சொய்சா 59, லக்ஷித மதுஷான் 53, நவோத் இழுக்வத்த 41, ஜீவன் மெண்டிஸ் 5/97, ரமித் ரம்புக்வெல்ல 3/117

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 72/3 (25) – மனோஜ் சரத்சந்திர 33*

நான்கு நாள் போட்டிகளாக இடம்பெறும் சுப்பர் 8 போட்டிகளின் இரண்டாவது தின ஆட்டம் நாளை தொடரும்.


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் நாள் நிறைவில் 169 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஹர்ஷ குரே 95 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேலும் சங்கீத் குரே, மிலிந்த சிறிவர்தன ஆகியோர் 60 ஓட்டங்களை கடக்க செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 351 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் பிரகாசித்த மலித் டி சில்வா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 144 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய புளூம்பீல்ட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம் 

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 207 (56) – யெரொன் டி அல்விஸ் 35, சுராஜ் ரந்திவ் 5/65, கசுன் ராஜித 3/71

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 351 (86.2) – ஹர்ஷ குரே 95, மிலிந்த சிறிவர்தன 67, சங்கீத் குரே 62, மலித் டி சில்வா 6/120

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135/4 (35) – நிபுன் கருணாநாயக்க 68, கசுன் ராஜித 2/47


 சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம் (தட்டு பிரிவு)

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 175 ஓட்டங்களை குவித்ததுடன், அடுத்து துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று மொஹமட் ஜலீல் 77 ஓட்டங்களையும் தமித ஹுனுகும்புர 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, காலி கிரிக்கெட் கழகம் 310 ஓட்டங்களை பதிவு செய்தது. பந்து வீச்சில் சோனகர் அணியின் சஹன் அதீஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

135 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக் கழகம் இன்றைய தினத்திற்கான ஆட்டம் நிறைவடையும் போது 1 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களை குவித்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 175 (68.2) – பபசர வடுகே 83, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/40

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 310 (91) –  மொஹமட் ஜலீல் 77, தமித ஹுனுகும்புர 50, ஷாலிக கருணாநாயக்க 40, சஹன் அதீஷா 3/28 

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 26/1 (16)

நாளை தட்டு பிரிவிற்கான போட்டிகளின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.