பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ‘A’ குழாம் அறிவிப்பு

976
Sri Lanka ‘A’ squad

பங்களாதேஷ் ‘A’ அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை ‘A’ குழாம் இலங்கை கிரிக்கெட் சபையால் (SLC) அறிவிக்கப்பட்டுள்ளது.

விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் திமுத் கருணாரத்ன போட்டிக்கான உடல் தகுதியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் பங்களாதேஷ் செல்லும் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக்க அணியின் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.     

6 போட்டிகளுக்காக பங்களாதேஷ் செல்லும் இலங்கை “A” அணி

இலங்கை “A” கிரிக்கெட் அணியானது இம்மாத…

2017 ஆம் அண்டு 1,031 ஓட்டங்களை பெற்று ஐந்தாவது அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவராக பதிவான கருணாரத்ன உத்தியோகபூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மாத்திரம் ஆடும் வாய்ப்பு உள்ளது. வரும் ஜூலை 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அவர் தகுதி பெறுவார் என்றும் நம்பப்படுகிறது.  

இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்பட்ட மாகாண மட்ட நான்கு நாள் போட்டித் தொடரில் காலி அணிக்கு தலைமை வகித்த ஷானக்கவுக்கு தலைவர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.  

முன்வரிசை துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான சதீர சமரவிக்ரமவும் இந்த குழாமில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அனுபவ வீரர்களான அஷான் பிரியன்ஜன் மற்றும் லஹிரு திரிமான்னவும் ‘A’ குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.  

இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான சரித் அசலங்க மற்றும் சம்மு அஷான் துடுப்பாட்ட வரிசையை வலுச்சேர்ப்பதோடு 2017/18 பருவத்தில் திறமையை வெளிப்படுத்திய மனோஜ் சரத்சந்திர முதல் முறை இலங்கை ‘A’  அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கழகங்களுக்கு இடையிலான ‘A’ நிலை தொடரில் 57.18 ஓட்ட சராசரியை பெற்ற சரத்சந்திர, மாகாண மட்ட தொடரின் மூன்று போட்டிகளிலும் 206 ஓட்டங்களை பெற்றார்.  

மாகாண ஒரு நாள் போட்டித் தொடரில் பிரகாசித்த வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில்..

இந்த குழாத்தில் தேர்வாளர்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பெயரிட்டுள்ளனர். இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய, சைனமன் (Chinaman) பந்துவீசும் லக்ஷான் சந்தகன் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மாகாண மட்ட நான்கு நாள் தொடரில் ஜயசூரிய மற்றும் பீரிஸ் இருவரும் சிறப்பாக பந்துவீசி முறையே 9 மற்றும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஷெஹான் மதுஷங்க, நிசல தாரக்க மற்றும் டிலேஷ் குணரத்ன ஆகிய மூவருமே நான்கு நாள் பேட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பத்தில் தேசிய அணிக்காக தனது கன்னி போட்டியில் ஆடிய மதுஷங்க இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை அணியில் மீண்டும் இணைவதற்கு திறமையை வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளார். தாரக, மாகாண மட்ட நான்கு நாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக 3 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை சாய்த்தார்.         

முழுமையான குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), தசுன் ஷானக்க (உப தலைவர்), தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அஷான் பிரியன்ஜன், லஹிரு திரிமான்ன, சரித் அசலங்க, சம்மு அஷான், மனோஜ் சரத்சந்திர, பிரபாத் ஜயசூரிய, லக்ஷான் சதகன், நிஷான் பீரிஸ், ஷெஹான் மதுஷ்க, நிசல தாரக்க, டிலேஷ் குணரத்ன 

பதில் வீரர்கள்

லஹிரு மிலந்த, விஷ்வ பெர்னாண்டோ, சதுரங்க டி சில்வா, லசித் எம்புல்தெனிய

தொடர் அட்டவணை

நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டித் தொடர்

முதலாவது போட்டி – ஜூன் 26 தொடக்கம் 29 வரை – ஷேக். கமால் சர்வதேச மைதானம், கோக்ஸ் பஷார்
இரண்டாவது போட்டி – ஜூலை 03 தொடக்கம் 06 வரை – ஷேக். கமால் சர்வதேச மைதானம், கோக்ஸ் பஷார்
மூன்றாவது போட்டி – ஜூலை 10 தொடக்கம் 13 வரை – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்

ஒரு நாள் தொடர்

ஜூலை 17 – முதலாவது ஒரு நாள் போட்டி – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்
ஜூலை 19 – இரண்டாவது ஒரு நாள் போட்டி – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்
ஜூலை 22 – மூன்றாவது ஒரு நாள் போட்டி – சில்லேட் சர்வதேச மைதானம், சில்லேட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<