இலங்கை இளையோர் அணி மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆட்டம் நிறைவுக்கு வரும்போது தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய இளையோர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியைவிட 229 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
இதில் இந்திய இளையோர் அணிக்காக அதர்வா டைட் (113), அயுஸ் படோனி (107) ஆகிய வீரர்ககள் சதம் அடித்து அசத்த, நெஹால் வதேரா (81) மற்றும் அனுஜ் ராவத் (63) ஆகியோர் அரைச்சதங்களை குவித்து அவ்வணியை முன்னிலை பெறச் செய்தனர்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆரம்பத்தை வெளிக்காட்டிய இந்திய கனிஷ்ட அணி
கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் 92 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் இரண்டாவது நாளை தொடங்கிய இந்திய இளையோர் அணிக்காக நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இடதுகை துடுப்பாட்ட வீரர்களான அதர்வா டைட் மற்றும் தெவிதுன் படிக்கல் ஆகிய வீரர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலன பெரேரவின் அபார பந்துவீச்சில் LBW முறையில் தெவிதுன் படிக்கல் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனையடுத்து களத்தில் நின்ற அதர்வா டைட்டுடன், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த பவன் ஷாஹ் இந்திய தரப்புக்காக கைகோர்த்தார். இவர்கள் இருவரும் இலங்கை பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொண்டு நான்காவது விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் (86) ஓன்றை வழங்கியிருந்தனர்.
இதன்போது அதிரடியாக ஆடிவந்த அதர்வா டைட் இலங்கை கனிஷ்ட அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பான முறையில் முகம் கொடுத்து ஓட்டக் குவிப்பில் ஈடுப்பட்டார். இதில் 160 பந்துகளில் 13 பௌண்டரிகளை மாத்திரம் பெற்று அதர்வா டைட் 113 ஓட்டங்களையும், பவன் ஷாஹ் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்தும் சிறப்பாக ஆடிய பவன் ஷாஹ், கலன பெரேராவின் பந்துவீச்சில் மெண்டிஸிடம் பிடியெடுப்பைக் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து சதம் அடித்து அசத்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அதர்வா டைட்டின் விக்கெட்டை இடதுகை சுழல் பந்துவீச்சாளரான கல்ஹார சேனாரத்ன பதம்பார்த்தார். இதன்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று முன்னிலை பெற்றிருந்தது.
தொடர்ந்து நேர்த்தியான இலக்கில் பந்துவீசிய இலங்கை இளையோர் அணியின் முன்னாள் தலைவரான கமிந்து மெண்டிஸின் சகோதரரான சந்துன் மெண்டிஸ், யாஷ் ரத்தோட்டை 34 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.
இந்த நிலையில், இந்திய இளையோர் அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய அயுஸ் படோனி (107) இன்றைய நாளில் இரண்டாவது சதத்தைப் பெற்றுக்கொள்ள, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய நெஹால் வதேரா (81) அரைச்சதம் ஒன்றை குவித்து அபாரம் காட்டியிருந்தார்.
எனினும், இலங்கை பந்துவீச்சாளர்களால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இறுதியில் இந்திய இளையோர் அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 107 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 473 ஓட்டங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்
இலங்கை இளையோர் அணி சார்பில் கலன பெரேரா மற்றும் கல்ஹார சேனாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், சந்துன் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
அதேநேரம், களத்தில் ஆட்டமிழக்காத நிலையில் அயுஸ் படோனி 107 ஓட்டங்களுடனும், நெஹால் வதேரா 81 ஓட்டங்களுடன் காணப்படுவதோடு, இந்திய இளையோர் அணி இலங்கையை விட முதல் இன்னிங்ஸில் 229 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















