இலகு வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை கனிஷ்ட அணி

4801
Vishwa Chathuranga

இன்று, ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரின், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், பங்களாதேஷ் கனிஷ்ட அணியினை டக்வத் லூயிஸ் முறையில் 26 ஓட்டங்களினால் வீழ்த்தி, இளையோர் ஆசிய கிண்ணத்தொடரில் முதல் முறையாக இலங்கை கனிஷ்ட அணி இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக்கொள்கின்றது.

பங்களாதேஷ் கனிஷ்ட அணியின் தலைவர் செய்ப் ஹஸ்ஸன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

SL v BANஇதன்படி, அணித்தலைவர் செய்ப் ஹஸ்ஸன் மற்றும் மொஹமட் ஸொசிப் ஆகியோருடன் களமிறங்கிய பங்களாதேஷ் கனிஷ்ட அணி ஒரு நல்ல ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருந்தது. பின்னர், அவ்வணி தனது முதல் விக்கெட்டினை 42 ஓட்டங்களை பெற்றிருந்த  போது ஜெஹான் டேனியலின் பந்து வீச்சில் பறிகொடுத்தது. தொடர்ந்து சொற்ப ஓட்ட இடைவெளியில் அடுத்த விக்கெட்டினையும் பங்களாதேஷ் கனிஷ்ட அணி பறிகொடுத்தது.

இந்த நிலையில், நிலைமையை சமாளித்துக்கொண்டு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்த பங்களாதேஷ் கனிஷ்ட அணி ஒரு நல்ல இணைப்பாட்டத்தினை உருவாக்கி கொண்டிருந்தது. இக்கட்டத்தில், அவ்வணி 166 ஓட்டங்களைப் பெற்ற போது தனது 5ஆவது விக்கெட்டினை பறிகொடுத்தது.

SRI v BANஇதனை அடுத்து வந்த வீரர்கள் இலங்கை கனிஷ்ட அணியின் ப்ரவீன் ஜயவிக்ரம, ஹரின் வீரசிங்க ஆகியோரின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் போதியளவு ஓட்டங்கள் எதனையும் பெறாத காரணத்தினால், 250 வரையிலான சவலான மொத்த  ஓட்ட எண்ணிக்கையை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷ் கனிஷ்ட அணி தனது சகல விக்கெட்டுகளையும் மேலதிக 28 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து, 48.4 ஓவர்கள் நிறைவில் 194 ஓட்டங்களோடு சுருண்டுகொண்டது.

பங்களாதேஷ் கனிஷ்ட அணி சார்பாக ரயான் ரஹ்மான் 38 ஓட்டங்களையும் அபீப் ஹொசைன் 36 ஓட்டங்களையும் அவ்வணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை கனிஷ்ட அணி சார்பாக, பங்களாதேஷின் நடுத்தர வரிசை வீரர்களை பதம் பார்த்த, ப்ரவீன் ஜயவிக்ரம 10 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இலங்கை கனிஷ்ட அணி சார்பாக முதலாவது சர்வதேச இளையோர் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஹரீன் வீரசிங்க 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, இலகு வெற்றி இலக்கான 195 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற களமிறங்கிய, இலங்கை கனிஷ்ட அணி 27.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழை குறுக்கிட்டு போட்டி சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்தும் மழை நீடித்த காரணத்தினால், இன்றைய போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் இலங்கை கனிஷ்ட அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை கனிஷ்ட அணியினை மீண்டுமொருமுறை வெற்றிப் பாதையில் அழைத்து சென்ற விஷ்வ சத்துரங்க இப்போட்டியில், அரைச்சதம் கடந்து 77 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகள் உடன் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் கனிஷ்ட அணிக்காக நயீம் ஹஸ்ஸன் இலங்கை கனிஷ்ட அணியில் பறிபோன இரண்டு விக்கெட்டுகளையும் 12 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற, இலங்கை கனிஷ்ட அணி 23ஆம் திகதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், இந்திய கனிஷ்ட அணியை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் கனிஷ்ட அணி: 194/10(48.3) – ரயான் ரஹ்மான் 38(58), அபிப் ஹொசைன் 36(57), செய்ப் ஹஸ்ஸன் 26(27), ப்ரவீன் ஜயவிக்ரம 25/4(10), ஹரீன் வீரசிங்க 29/3(7.3)

இலங்கை கனிஷ்ட அணி: 106/2(27.1) – விஷ்வ சத்துரங்க 68(77), ரெவன் கெல்லி 23(56), நயீம் ஹஸ்ஸன் 12/2(7.1)

போட்டி முடிவு – இலங்கை கனிஷ்ட அணி டக்வத் லூயிஸ் முறையில் 26 ஓட்டங்களால் வெற்றி