சாதனை படைத்து இலங்கையைத் தகர்த்தது அவுஸ்திரேலியா

2437

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 1ஆவது டி20 போட்டி இன்று கண்டி பல்லேகளே மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது.

இதன் படி அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக அணியின் தலைவர் வோர்னர் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் களமிறங்கினார்கள். ஆரம்பத்திலேயே வோர்னர் 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் மறுமுனையில் மெக்ஸ்வெல் வாணவேடிக்கை காட்டினார்.

முதல் 6 ஒவர்களில் 73 ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலியா 9.3 ஓவர்களில் 100 ஓட்டங்களையும், 13 ஓவர்களில் 150 ஓட்டங்களையும் எட்டியது. 27 பந்துகளில் அரைச்சதம் விளாசிய மெக்ஸ்வெல் அடுத்த 22 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் அவர் சதம் கடந்தார். 16.3 ஓவர்களில் அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களைக் கடந்தது, பின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்று  இலங்கையின் 9 வருட உலக சாதனையை சாதனையை முறியடித்தது.

 Photos: Sri Lanka vs Australia – 1st T20I 

அவுஸ்திரேலிய அணி சார்பில் மெக்ஸ்வெல் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 65 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கலாக 145 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர ஹெட் 45 ஓட்டங்களையும் கவாஜா 36 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அனைவரும் ஓட்டங்களை வாரி வழங்கினர். அத்தோடு அனைவரும் ஓவருக்கு 10க்கும் அதிகமான ஓட்டங்களை வழங்கி இருந்தனர். மீண்டும் அணிக்குள் இணைந்த கசுன் ரஜித 3 ஓவர்களில் 46 ஓட்டங்களை வழங்கி இருந்தார்.

இதன் பின்னர் 264 என்ற உலக சாதனை இலக்கை நோக்கி இலங்கை அணி வீரர்கள் களமிறங்கினார்கள். ஆனால் அவர்களால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதில் சந்திமால் 58 ஓட்டங்களையும், கபுகெதர 43 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் பொலன்ட் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளைத் தம்மிடையே பங்கு போட்டனர். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக க்ளென் மெக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.இந்த 2 அணிகளுக்கும் இடையிலான இறுதி டி20 மற்றும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 263/3 (20)

மெக்ஸ்வெல் 145*, ஹெட் 45, கவாஜா 36 – சச்சித் பதிரன 45/1, சச்சித்திர சேனநாயக்க 49/1

இலங்கை – 178/9 (20)

சந்திமால் 58, கபுகெதர 43, குசல் மெண்டிஸ் 22 – ஸ்டார்க் 26/3, போலண்ட் 26/3

அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்