இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற்றது. அணித் தலைவர் கமில் மிஷார நிதானமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததோடு மத்திய பின் வரிசையில் சொனால் தினூஷ மற்றும் கலிந்து சிஹான் அரைச்சதம் பெற்றனர்.
இந்த பயிற்சிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ். மதூஷனும் இடம்பெற்றிருந்த போதும் அவர் முதல் நாளில் களமிறங்கவில்லை.
வெற்றியை நோக்கி முன்னேறுகின்றது இலங்கை அணி
இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வந்திருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி இந்த தொடர்களுக்கு முன்னர் இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியை எதிர்கொண்டுள்ளது.
கொழும்பு, NCC மைதானத்தில் இன்று (13) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற றோயல் கல்லூரியைச் சேர்ந்த அணித்தலைவர் கமில் மிஷார உலர்ந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த கமில் மிஷார மற்றும் அஷேன் பெர்னாண்டோ முதல் 10 ஓவர்களிலும் விக்கெட்டுகளை காத்துக்கொண்டு 40 ஒட்டங்களை பகிர்ந்து கொண்டனர். எனினும் இந்திய அணியின் முதல் பந்துவீச்சாளர் மாற்றத்தில் பந்துவீச வந்த ஆகாஷ் பாண்டேவின் பந்துக்கு இலகுவான பிடியெடுப்பொன்றை கொடுத்து வலதுகை துடுப்பாட்ட வீரரான அஷேன் பெர்னாண்டோ (15) ஆட்டமிழந்து சென்றார்.
3ஆவது வீரராக வந்த முதித் பிரேமதாச 12 ஆவது ஓவரில் ஸ்லிப் திசையில் பிடியெடுப்பொன்றை கொடுத்தபோதும் அதிர்ஷ்டவசமாக தப்பினார். எனினும் சௌத்திரியிடம் இலகுவான பிடியெடுப்பொன்றை கொடுத்த அவர் பாண்டேவின் இரண்டாவது விக்கெட்டாக 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தனது இன்னிங்ஸை சிறப்பாக கட்டியெழுப்பிக்கொண்டிருந்த அணித்தலைவர் கமில் மிஷார பண்டேவின் பந்துவீச்சுக்கு LBW முறையில் ஆட்டமிழந்தார். 55 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 40 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய இளையோர் அணித்தலைவர் அனுஜ் ரவாத் 21 ஆவது ஓவரில் வைத்தே தனது முக்கிய சுழல்பந்து வீச்சாளர் ஹர்ஷ் தியாகியை அழைத்தார். பந்துவீச வந்த வேகத்திலே தியாகி தனது இரண்டாவது பந்தில் கவின் பெரேராவை 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் மேலதிக வீரர்களாக சேர்க்கப்பட்டிருக்கும் சொனால் தினூஷ மற்றும் கலிந்து சிஹான் இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு இணைந்து 85 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதன்போது சொனாலை விட ஓட்டங்களை வேகமாக பெற்ற கலிந்து அரைச்சதத்தை எட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு
தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் டாயிட் (Taide) இந்திய அணிக்காக அபார களத்தடுப்பு ஒன்றை வெளிப்படுத்தினார். ஒரு விக்கெட் மாத்திரமே இலக்கு தெரியும் நிலையில் ஆபத்தான ஓட்டம் ஒன்றை பெற முயன்ற கலிந்துவை ரன் அவுட் செய்த டாயிட் இலங்கை பதினொருவர் அணியின் ஸ்திரமான இணைப்பாட்டம் ஒன்றை தளர்த்தினார்.
சிறப்பாக ஆடிய கலிந்து 90 பந்துகளில் 61 ஓட்டங்களை குவித்தார்.
இதனைத் தொடர்ந்து சொனால் உடன் இணைந்த ரவிந்து பெர்னாண்டோ இலங்கை இன்னிங்ஸை மேலும் கட்டியெழுப்ப உதவினார். பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.
இந்த இடைவேளைக்கு பின்னர் சொனால் 50 ஓட்டங்களை எட்டியதோடு ரவிந்துவுடன் இணைந்து அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்று சொனால் வெளியேறினார். மஹீஷ் தீக்ஷன புதிய வீரராக களமிறங்கினார்.
இந்நிலையில் டாயிட்டின் பந்துவீச்சுக்கு ரவிந்து தனது விக்கெட்டை பறிகொடுத்ததோடு மீண்டும் செயற்பட்ட டாயிட் முதித் லக்ஷானின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது லக்ஷான் கமகே 20 பந்துகளில் 15 ஓட்டங்களுடனும், மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணி 88 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்றுள்ளது. நாளை போட்டியின் இரண்டாவதும் கடைசியுமான நாளாகும்.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















