T20I போட்டிகளில் இலங்கை அணியால் சாதிக்க முடியுமா?

88

இலங்கை கிரிக்கெட் அணி தங்களுடைய பலத்தை கவனத்தில் கொண்டு T20 போட்டிகளில் விளையாட வேண்டும் என இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.  

அதேநேரம், தங்களுடைய பலத்தை கவனத்தில் கொள்ளும் இலங்கை அணி, ஏனைய அணிகள் T20I போட்டிகளில் விளையாடுவது போன்று, தாங்களும் விளையாட வேண்டும் என முயற்சிக்க கூடாது எனவும் இவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கிரிக்கெட், றக்பி, கால்பந்து பயிற்சிகள் ஜூன் முதல்

இலங்கை கிரிக்கெட் அணி T20 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றது. அதிலும் கடைசியாக நடைபெற்ற மூன்று இருதரப்பு தொடர்களையும் இழந்துள்ள இலங்கை அணி, T20 தரவரிசையில் 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 

“ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என நான் நினைக்கிறேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தவறுகள் செய்தால் அதனை திருத்திக்கொள்வதற்கு நேரம் கிடைக்கும். ஆனால், T20 போட்டிகளில் தவறுகளை செய்தால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கடினம்” என திமுத் கருணாரத்ன எமது இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை அணி T20 போட்டிகளில் தடுமாறுவதற்கான காரணத்தையும் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். “எமது துடுப்பாட்ட வரிசை அதிகமான தடுமாற்றத்தை காட்டுகிறது. ஏனைய அணிகளுடன் ஒப்பிடும் போது, எமது அணியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய தன்மை குறைவாக காணப்படுகிறது. பவர் ப்ளே ஓவர்களில் வேகமாக துடுப்பெடுத்தாட முயன்று விக்கெட்டுகளை பறிகொடுக்கிறோம். 

ஏனைய அணி வீரர்களை பொருத்தவரை வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுப்பதற்கான பலத்தையும், அனுபவத்தையும் கொண்டுள்ளனர். எனினும், அந்த அணிகளும் இரண்டு வீரர்களை மாத்திரமே வேகமாக ஓட்டங்களை எடுக்கும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளனர். அத்துடன், குறித்த வீரர்களும் களத்தடுப்பாளர்களுக்கு இடையில் பந்துகளை அடித்து ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், எமது வீரர்கள் களத்தடுப்பாளருக்கு மேல் பந்துகளை அடிக்க முயற்சிக்கிறனர்.

எமது அணிக்கான போட்டியில் குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெறும் பட்சத்தில், எம்மால் அதிகமான ஓட்டங்களை பெறமுடிகின்றது” என்றார்.

இதேவேளை, இலங்கை அணி பந்துவீச்சிலும் பலம் பெற வேண்டும் என திமுத் கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். “லசித் மாலிங்கவை தவிர்ந்த ஏனைய பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு சிரமப்படுகின்றனர். அதுமாத்திரமின்றி ஒருநாள், டெஸ்ட் மற்றும் T20  என அனைத்து போட்டிகளிலும் மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கும் தடுமாறுகின்றோம். விக்கெட் எடுக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால், T20  போட்டிகளில் வெற்றிபெற முடியும்” என்றார்.

T20 போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு இலங்கை அணியில் திறமை இருக்கின்றது என்பதை திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளதுடன், போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு இலங்கை அணி புதிய திட்டங்களை கையாள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“எம்மிடம் இருக்கும் திறமையையும், பலத்தையும் அடையாளம் கண்டால், T20 போட்டிகளில் வெற்றிபெற முடியும். நாம் இதற்கு முன்னரும் T20 போட்டிகளில் விளையாடியுள்ளோம். எனவே, ஏனைய அணிகள் எவ்வாறு விளையாடுகிறது என்பதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, எமது அணிக்கு என ஒரு திட்டத்தை வகுத்து விளையாடினால், எம்மால் போட்டிகளில் வெற்றிபெற முடியும்” என்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<