ஆறுதல் வெற்றியைப் பெற்றது இராணுவ அணி

149
Army SC

முதலாம் வாரத்தில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர், இவ்வாரம் CH&FC அணியை 39 -12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தது இராணுவ அணி.

இன்று ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் CH&FC அணியின் கவனயீன விளையாட்டினை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இராணுவ அணியானது வெற்றியை தமதாக்கிக்கொண்டது. சென்ற வாரம் அடைந்த அபார  தோல்வியின் பின்னர் களமிறங்கிய CH&FC அணி முதல் பாதியில் சில நிமிடங்கள் இராணுவ அணியுடன் புள்ளிகளை சமமாகப் பெற்ற பொழுதும், இராணுவ அணி 10 புள்ளிகள் முன்னிலையில் முதல் பாதியை முடித்துக்கொண்டது.

Photos: CH&FC v Army SC | Dialog Rugby League 2016/17 | #Match 7

போட்டியின் முதலாவது புள்ளியை இராணுவ அணி பெற்றுக்கொண்டது. CH&FC அணி விட்ட தவறின் மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இராணுவ அணி 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.  தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இராணுவ அணியானது  சமேத  நாணயக்காரா மூலம் ட்ரை வைத்தது, சாலிந்த உதையை தவறவிடாததால் முதல் 15 நிமிடங்களில் 10-00 என இராணுவ அணி முன்னிலை வகித்தது.

போட்டியில் நிலைபெற CH&FC அணியானது வேகமான ஆட்டத்தின் மூலம் இராணுவ அணிக்கு அழுத்தம் கொடுத்து இராணுவ அணியின் கோட்டையின் உள்ளே நுழைந்து. எனினும் CH&FC அணியால் ட்ரை வைக்க முடியவில்லை. மேலும் CH&FC அணி விட்ட சிறிய தவறினால் பந்தை பெற்றுக்கொண்ட சௌம்ய ஹேரத் பந்தை எடுத்து வேகமாக ஓடிச் சென்று 5 மீட்டர் கோட்டின் அருகில் அரவிந்த கருணாரத்னவிடம் பந்தை பரிமாற்றினார். இதனால் அரவிந்த கருணாரத்ன இராணுவ அணிக்காக 3ஆவது ட்ரையை வைத்தார்.  இராணுவ அணி 17-00 என முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் இறுதி 20 நிமிடங்கள் CH&FC அணியே ஆதிக்கம் செலுத்தியது. முறையான மற்றும் நிதானமான விளையாட்டின் மூலம்  இராணுவ அணிக்கு அழுத்தம் கொடுத்த CH&FC அணி இறுதியாக மொகமட் ரிப்கான் மூலமாக தமது முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. பாரிஸ் அலியின் வெற்றிகரமான உதையுடன் 7 புள்ளிகளை CH&FC அணி பெற்றுக்கொண்டது .

முதல் பாதி : இராணுவ அணி 17 – 07 CH&FC

இரண்டாம் பாதியில் மீண்டும் CH&FC அணியே ஆதிக்கம் செலுத்தியது. தலைவர் சாணக பொன்சேகாவின் உதவியுடன் ஜனித் சந்திமால் CH&FC அணி சார்பாக ட்ரை வைத்து CH&FC அணி 12 புள்ளிகள் என்ற நிலையை அடைய உதவினார்.

எனினும் அதன் பின்னர் மீண்டும் தமது மோசமான விளையாட்டினை CH&FC  அணி வெளிக்காட்டத் தொடங்கியது. பாரிஸ் அலியின் மோசமான உதையின் மூலம் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட இராணுவ அணியானது மொகமட் ரிஸ்வி மூலமாக தமது 3ஆவது ட்ரையினை பெற்றுக்கொண்டு இராணுவ அணி 22-12 என முன்னிலை பெற்றது.

சிறிது நேரத்தின் பின்னர் தமக்கு கிடைத்த பல பெனால்டிகளை பயன்படுத்தி சமீர சில்வாவின் மூலம் 4ஆவது ட்ரையை இராணுவ அணி பெற்றுக்கொண்டது. சாலிந்த 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்க இராணுவ  அணி 29-12 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இராணுவ அணி இறுதி 5 நிமிடங்களில் 2 ட்ரை வைத்து தமது முன்னிலையை அதிகரித்துக்கொண்டது. 76ஆவது நிமிடத்தில் சமீர சில்வா இராணுவ அணி சார்பாக 2ஆவது ட்ரை வைத்ததன் மூலம் இராணுவ அணி 34 புள்ளிகளைப் பெற்றது.

போட்டியின் இறுதி நிமிடங்களில், இராணுவ அணியின் வினோத் குமார், ரோகித ராஜபக்ஷவை பிழையான முறையில் தடுத்ததால் இரு அணிகளுக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் நடுவர்களின் தலையீட்டின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. வினோத் குமார் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் CH&FC அணியின் தேவிந்த கொலம்பகேவிற்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

மேலதிக நேரத்தில் சஞ்சீவ ஹபுகஸ்கும்புர இராணுவ அணி சார்பாக 6ஆவது ட்ரை வைத்தார். இதன் மூலம் இராணுவ அணியானது 39 -12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்ற வாரம் 1 புள்ளியால் தோல்வியுற்ற இராணுவ அணிக்கு இது ஒரு ஆறுதல் வெற்றியாகும். மறுமுனையில் CH&FC அணியும் சிறப்பான ஒரு போட்டியைக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம் : இராணுவ அணி 39 – 12 CH&FC

ThePapare போட்டியின் ஆட்ட நாயகன் – சமீர சில்வா (இராணுவ அணி)