ரெய்னா – கோஹ்லியின் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

163

நியூசிலாந்து அணிக்கெதிரான 3ஆவது T20I போட்டியில் சதமடித்த இந்திய அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில், சர்வதேச T20I போட்டிகளில் பல முக்கிய சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று (01) அகமதாபாத்தில் நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான T20I போட்டியில் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20I தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில், சதம் விளாசி பல சாதனைகளை முறியடித்தார்.  இந்தப் போட்டியில் 63 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 126 ஓட்டங்களைக் குவித்து T20I போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I என மூவகை கிரிக்கெட் போட்டியிலும் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் படைத்துள்ளனர்.

அத்தோடு, சர்வதேச T20I கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைக் குவித்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் T20I கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக கோஹ்லி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 61 பந்துகளில் 122 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா, இலங்கை அணிக்கு எதிராக 43 பந்துகளில் 118 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர். எனவே, தற்போது அந்த சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

இதேபோல, சர்வதேச T20I போட்டிகளில் சதம் அடித்த ஏழாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுக் கொண்டார். ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கேஎல் ராகுல், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், விராட் கோஹ்லி ஆகியோருடன் அவர் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

அதே போன்று, T20I போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் சாதனை ஒன்றினையும் கில் முறியடித்துள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்காக இளம் வயதில் சர்வதேச T20I கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா (23 வயது 156 நாட்கள்) வைத்திருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் சுப்மன் கில் அடித்த சதத்தின் மூலம் (23 வயது 146 நாட்கள்) அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அண்மைகாலமாகவே தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அசத்தியிருந்ததோடு கடைசி ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்திருந்தார். இந்நிலையில் தற்போது T20I கிரிக்கெட்டிலும் சதம் அடித்த அவர் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட சுப்மன் கில், இதுவரை 13 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 6 T20I போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் டெஸ்ட் மற்றும் T20I கிரிக்கெட்டில் தலா ஒரு சதத்தையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களையும் பதிவு செய்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<