பிரான்ஸ் அணித்தலைவர் லொரிஸ் ஓய்வு

332

பிரான்ஸ் கோல் காப்பாளரான 36 வயது ஹூகோ லொரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற 2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆர்ஜன்டீனாவிடம் பெனால்டி சூட் அவுட்டில் தோல்வி அடைந்து மூன்று வாரங்களின் பின்னரே டொட்டன்ஹம் அணித் தலைவர் தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2018இல் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியில் தலைவராக லொரிஸ் செயற்பட்டிருந்தார்.

‘(அணிக்காக) அனைத்தையும் வழங்கிய உணர்வோடு நான் எனது சர்வதேச கால்பந்து வாழ்வை நிறை செய்வதற்கு தீர்மானித்தேன்’ என்று லொரிஸ் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் பத்திரிகையான லெகியுபேவுக்கு பேட்டி அளித்த அவர், ‘யூரோ தகுதிகாண் போட்டிகள் ஆரம்பிக்க இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில் இதனை அறிவிப்பது முக்கியம் என நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

2024 யூரோ தகுதிகாண் போட்டிகளில் பிரான்ஸ் அணி ஜிப்ரால்டா, கிரீஸ், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்துடன் ஆடவுள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பரில் உருகுவேயுக்கு எதிரான நட்புறவுப் போட்டியின்போது தனது 21 வயதில் லொரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அறிமுகம் பெற்றார். அவர் 145 போட்டிகளில் பிரான்ஸ் அணிக்காக ஆடி, அந்த அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவராகவும் சாதனை படைத்துள்ளார். லொரிஸ் பிரான்ஸ் அணிக்கு 121 போட்டிகளில் தலைமை வகித்ததும் சாதனையாக உள்ளது.

‘உலகக் கிண்ணம் முடிந்த பின்னர் நான் இது பற்றி சிந்தித்தபோதும், ஆறு மாதங்களாக எது ஆழ் மனதில் இருந்து வந்தது. போட்டியின்போது அது அதிகரித்ததே இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது’ என்றார்.

2018 உலகக் கிண்ணத்துடன் அவர் 2021 தேசிய லீக்கை வென்றதோடு 2016 ஐரோப்பிய சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற அணியை வழிநடத்தினார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<