மெண்டிஸின் அபார சதத்தால் தொடர் வெற்றி இலங்கை வசம்!

ICC Twitter

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றித் தோல்வியின்றி சமனிலையில் முடிவடைய, இலங்கை அணி தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.

ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி முதலில் முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கைக்கு எதிராக பாரிய இலக்கை நிர்ணயிக்கவுள்ள ஜிம்பாப்வே!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது…..

இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க, 113 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி, இன்றைய தினம் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதன்படி, இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 361 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட, இன்றைய தினம் இலங்கை அணி ஆட்டத்தை ஆரம்பித்தது.

குறிப்பாக ஐந்தாவது நாளான இன்று 361 என்ற வெற்றியிலக்கை நோக்கிய இலங்கை அணி, போட்டியின் வெற்றிக்கான முயற்சிகளை மேற்கொள்ள தவறியிருந்ததுடன், ஆரம்பத்திலிருந்து போட்டியை சமப்படுத்துவதற்கான முயற்சிகளில் மாத்திரம் ஈடுபட்டது.

அணியின் திட்டத்திற்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக துடுப்பெடுத்தாட, குறைந்த ஓட்ட வேகத்துடன் இலங்கை அணி ஆட்டத்தை நகர்த்தியது. எனினும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோவுடன் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பகிர்ந்தார். இவர்கள் இருவரும் மதியபோசன இடைவேளை வரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடினர்.

ஆனாலும், மதியபோசன இடைவேளையின் பின்னர் வீசப்பட்ட சிக்கண்டர் ராஷவின் முதல் பந்தில் ஓசத பெர்னாண்டோ, 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வேளை ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 44 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச் சத வாய்ப்பை இழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் குசல் மெண்டிஸ் அரைச் சதம் கடக்க, அடுத்து களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸுடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், தேநீர் இடைவேளைக்கு முன்னர் 13 ஓட்டங்களுடன் மெதிவ்ஸ் ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும், தேநீர் இடைவேளையின் பின்னர் குசல் மெண்டிஸ் தனது 7வது டெஸ்ட் சதத்தை பெற்றுக்கொள்ள, நிதானமாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் இன்றைய ஆட்டநேர இறுதிவரை துடுப்பெடுத்தாடினார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஆதிக்கம்!

ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு…..

இதில், குசல் மெண்டிஸ் 116 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்த போது, இரண்டு அணித் தலைவர்களும் போட்டியை சமப்படுத்துவதற்கு தீர்மானித்தர். இதன்போது, இலங்கை அணி 204 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாவது போட்டி சமனிலையில் முடிவடைந்த போதும், முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-0 என கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கண்டர் ரஷா தெரிவுசெய்யப்பட்டதுடன்,தொடர் ஆட்டநாயகனாக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<