உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ள சகீப் அல் ஹசன்!

137

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து T20 கிரிக்கெட் தொடரில் இணைவதற்கு அந்நாட்டு சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் உட்பட 113 வீரர்கள் அவர்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இம்மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதுடன், முதல் நாளில் சகீப் அல் ஹசன் உட்பட 80 வீரர்களுக்கு கிரிக்கெட் சபையின் பலம் மற்றும் மறுசீரமைப்பு பயிற்றுவிப்பாளர்களின் கீழ் உடற்தகுதி கண்காணிக்கப்படவுள்ளது. 

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த பச்சைக் கொடி

எவ்வாறாயினும், வீரர்கள் அனைவரையும் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ள நிலையில், வீரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சகீப் அல் ஹசன், சூதாட்ட தரகர்கள் தன்னை நெருங்கியதை கிரிக்கெட் சபை மற்றும் ஐசிசிக்கு அறிவிக்காத காரணத்தால் ஒரு வருடம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், இரண்டு வருட தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும், தடைக்காலம் கடந்த மாதம் 29ஆம் திகதி நிறைவுக்கு வந்திருந்தது.

தற்போது சகீப் அல் ஹசன் அமெரிக்காவின் மின்னெசோட்டாவில் தங்கியிருக்கும் நிலையில், இந்தவார இறுதியில் டாக்கா திரும்பவுள்ளார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜுல் அபிதீன், நடைபெறவுள்ள பங்கபந்து T20 தொடரில் சகீப் அல் ஹசன் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். 2020-21ம் ஆண்டு பருவகாலத்துக்கான உள்ளூர் தொடர்களில், கொவிட்-19 வைரஸ் காரணமாக 2ஆவது உள்ளூர் தொடராக பங்கபந்து T20 தொடர் நடைபெறவுள்ளது.

Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

கடந்த மாதம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, இலங்கை தொடருக்காக 46 வீரர்களை அழைத்து பயிற்சிகளை நடத்திவந்தது. எனினும், தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மூன்று அணிகள் பங்கேற்கும் தலைவர் கிண்ணம் ஒன்றை நடத்தியிருந்தது. 

தற்போது நடைபெறவுள்ள பங்கபந்து T20 தொடர் 5 அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. போட்டித் தொடர் இம்மாத பிற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்கும் முகமாக பங்களாதேஷ் கிரிக்கெட் இந்த தொடரை நடத்த எதிர்பார்த்துள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<