உலகக் கிண்ணத்திற்காக பயிற்சிக்கு திரும்பியுள்ள நெய்மார்

254
Image Courtesy - Getty Images

உலகக் கிண்ணத்தை முன்னிட்டு பிரேசில் அணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் நெய்மார் பயிற்சி முகாமுக்கு திரும்பியுள்ளார்.

வலது காலில் சத்திர சிகிச்சைக்கு முகம்கொடுத்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் முன்கள வீரர் நெய்மார் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பிரேசிலின் ட்ராசோபொலிஸ் நகரில் இருக்கும் க்ரான்ஜா கொமரி பயிற்சி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நெய்மார் ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது மன்செஸ்டர் சிட்டியின் காப்ரியல் ஜீசஸ் மற்றும் டனிலோவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட நெய்மார், காயத்தில் இருந்து மீண்டுவரும் தனது பாதத்தை பயன்படுத்தி பந்தை நீண்ட தூரத்திற்கும், குறுகிய தூரத்திற்கும் உதைத்து பயிற்சி செய்தார்.

முன்னதாக மருத்துவ சோதனைக்கு முகம்கொடுத்த அவர் அதில் உடல் தகுதியை நிரூபித்த பின்னரே பயிற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடைத்தது.   

காயத்திலிருந்து மீண்டு வரும் நெய்மார் பிரேசில் உலகக் கிண்ண குழாமில்

இதேவேளை நெய்மார் பல்லோன் டி ஓர் (Ballon d’Or) மற்றும் சம்பியன்ஸ் லீக் வெல்ல வேண்டுமாக இருந்தால் அவர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இருந்த விலக வேண்டும் என்று பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரிவால்டோ மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

”ரியெல் மெட்ரிட் அல்லது இங்கிலாந்தின் ஏதாவது ஒரு கழகத்திற்கு செல்வதே (பல்லோன் டி ஓரை வெல்வதற்கு) அதிக வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்” என்று ரிவால்டோ தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

”இதன் மூலம் நான் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஸ்பெயின் அல்லது இங்கிலாந்து லீக் போன்றதல்ல பிரெஞ்ச் லீக் அங்கே சிக்கல்கள் உள்ளன.  

நெய்மாருக்கு சம்பியன்ஸ் லீக்கை வெல்லவும் அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. சம்பியன்ஸ் லீக்கில் ஆடி வெற்றி பெறும்போது உலகின் சிறந்த வீரராவதற்கு அவருக்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது” என்றும் ரிவால்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் FIFA உலகக் கிண்ண போட்டியில் E குழுவில் விளையாடும் பிரேசில் அணி தனது முதல் போட்டியாக ஜுன் மாதம் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதற்கு முன்னர் நெய்மார் முழு உடல் தகுதி பெற்றுவிடுவார் என்று பிரேசில் அணி பெரிதும் எதிர்பார்த்துள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<