பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிக் பாஷ் தொடரில இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற பிக் பாஷ் T20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஷஹீன் ஷா அப்ரிடி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காபா நகரில் நடைபெற்ற பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்ட் ஸ்டிரைக்கர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஷஹீன் ஷா அப்ரிடி காயமடைந்தார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில் அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் குறித்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுவதாக பிரிஸ்பேன் ஹீட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதி செய்துள்ளது. இதன்படி, அவர் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்பி சிகிச்சை பெற உள்ளார். சிகிச்சை முடிந்த பின் T20 உலகக் கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
- சிரேஷ்ட வீரர்களின்றி இலங்கை வரும் பாகிஸ்தான் அணி
- “Rebuild Sri Lanka” நிகழ்ச்சித்திட்டத்திற்காக உதவும் இலங்கை – பாகிஸ்தான் T20 தொடர்
இதுகுறித்து ஷஹீன் ஷா அப்ரிடி கூறுகையில், “பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடுவதை மிகவும் விரும்பினேன். அனைத்து லீக் போட்டிகளிலும் நான் உற்சாகமாக பங்கேற்றேன். காயம் அடைந்துள்ளதால் போட்டித் தொடரின் இறுதி வரை பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வருந்துகிறேன்.” என்றார்.
பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திலும் இடம்பெறாமல் பிக் பாஷஸ தொடரில் பிரிஸ்பான் ஹீட் அணிக்காக ஆடி வந்த நிலையிலேயே அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இவ்வாறு திரும்ப அழைத்துள்ளது. குறிப்பாக, அடுத்த மாதம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்காக அவர் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் சிகிச்சையை ஆரம்பிக்கவுள்ளார்.
இதனிடையே, அப்ரிடி இம்முறை பிக் பாஷ் தொடரில் நான்கு போட்டிகளில் ஆடி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தி இருந்தார்.
இதேவேளை, இம்முறை பிக் பாஷ் லீக் தொடரில் அப்ரிடி தவிர, பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஹரீஸ் ரவூப் ஆகிய வீரர்களும் விளையாடி வருகின்றனர். இதன்காரணமாக அடுத்த வாரம் முதல் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்த வீரர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















