ரியல் மட்ரிட்டுக்கு பிரியாவிடை கொடுக்கும் செர்ஜியோ ராமோஸ்

156
Getty

ரியல் மட்ரிட் அணியின் தலைவரும், அக்கழகத்தின் முன்னணி வீரர்களுள் ஒருவருமான செர்ஜியோ ராமோஸ், அக்கழகத்திலிருந்து இந்த பருவக்காலத்துடன் வெளியேறுவதாக ரியல் மட்ரிட் கழகம் வியாழக்கிழமை (17) அறிவித்தது.

யூரோ 2020 அடுத்த சுற்றில் இத்தாலி; ரஷ்யா, வேல்ஸ் முதல் வெற்றி

35 வயதுடைய பின்கள வீரரான ராமோஸ், கடந்த 2005ஆம் ஆண்டு 19 வயது நிரம்பிய வீரராக ரியல் மட்ரிட் கழகத்தில் இணைந்ததிலிருந்து மட்ரிட்டுக்காக 671 போட்டிகளில் விளையாடி 101 கோல்களை அடித்துள்ளார். அத்துடன் ரியல் மட்ரிட் அணி 2005 இலிருந்து வெற்றி பெற்ற 5 லாலிகா கிண்ணங்களிலும், 4 சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களிலும் இவரின் பங்கு மிகவும் அளப்பரியது.

2009 இல் ரியல் மட்ரிட் அணியின் நான்கு தலைவர்களில் ஒருவராக  ராமோஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கோல்காப்பாளர் இகர் கசிலாஸ் இக்கழகத்தை விட்டு வெளியேறிய பின் 2015ஆம் ஆண்டு மட்ரிட் அணியின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டு, 2021 வரை  ரியல் மட்ரிட் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தினார்.  தனது 16 வருட ரியல் மட்ரிட் வாழ்க்கையில், மட்ரிட்  22 கிண்ணங்களை கைப்பற்ற ராமோஸ் உதவியிருக்கிறார்.

சர்வதேச ரீதியில் ஸ்பெயின் அணிக்காக இதுவரையில் 180 போட்டிகளில் ராமோஸ் விளையாடியுள்ளார். இவர் ஸ்பெயின் அணியுடன் 2010 கால்பந்து உலகக் கிண்ணம் உட்பட 3 கிண்ணங்களை வெற்றி பெற்றுள்ளமையும் ஓர் சிறப்பம்சமாகும். எனினும் இவ்வருடம் நடைபெறுகின்ற யூரோ கிண்ண கால்பந்து தொடருக்கான ஸ்பெயின் குழாத்தில் ராமோஸ் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய கிண்ணத்துக்கான இறுதி தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை தகுதி

கடந்த 2005ஆம் ஆண்டு 27 மில்லியன் பவுண்ட்களுக்கு ராமோஸ், பிளோரின்டினோ பெரேஸ் தலைமையிலான மட்ரிட் அணியால் வாங்கப்பட்டபோது, அக்காலத்தில் அதிக தொகை செலுத்தப்பட்டு வாங்கப்பட்ட ஸ்பானிய பின்கள வீரராக பார்க்கப்பட்டார். 

இந்த நிலையில் இவ்வருடத்துடன் அவரது ஒப்பந்த காலம் முடிவடைவதையடுத்து மட்ரிட்டிலிருந்து இலவச வீரராக வெளியேறுகிறார் ராமோஸ். செர்ஜியோ ராமோஸ் ரியல் மட்ரிட்டிலிருந்து வெளியேறுகின்ற நிலையில் அவ்வணியின் புதிய தலைவராக பிரேசிலை சேர்ந்த மார்செலோ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. 

16 வருடங்களாக ஒரே கழகத்திற்காக ஆடி அக்கழகத்துடன் வெற்றி தோல்விகளை பார்த்து ஒரு ஜாம்பவானாக வெளியேறும் செர்ஜியோ ராமோஸ்ஸிற்கு வியாழக்கிழமை பிரியாவிடை வைபவம் இடம்பெறும் என ரியல் மட்ரிட் அணி வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<