அதிருப்தியுடன் ஸ்பெயினுக்கு விடை கொடுக்கும் ராமோஸ்

283

ஸ்பேயின் பின்கள வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளர் லுவிஸ் லா புவன்டே எதிர்கால திட்டத்தில் தம்மை சேர்க்கவில்லை என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக ஆடும் 36 வயதான ராமோஸ் 2010 உலகக் கிண்ணத்தை வென்றதோடு ஸ்பெயின் அணியுடன் இணைந்து 2008 மற்றும் 2012 ஐரோப்பிய கிண்ணங்களையும் வென்றார். அவர் ஸ்பெயின் அணிக்காக கடைசியாக 2021 மார்ச் மாதத்தில் விளையாடினார்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் 37 வயதை எட்டும் ராமோஸ் சமூக ஊடகத்தில் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு, புதிய பயிற்சியாளர் தம்மை கட்டாயப்படுத்தியதாக சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘எமது அன்புக்குரிய மற்றும் உற்சாகத்தைத் தரும் ரொஜா (ஸ்பெயின்) தேசிய அணிக்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று ராமோஸ் எழுதியுள்ளார்.

‘இன்று (23) காலை தற்போதைய பயிற்சியாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது. என்ன திறமையை வெளிப்படுத்தியபோதும் அல்லது எனது கால்பந்து வாழ்வை நான் எவ்வாறு முன்னெடுத்தபோதும் என்னை கருத்தில் கொள்ளப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார். மிக வேதனையுடன் எனது பயணத்தை முடித்துக் கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் ராமோஸ் அந்நாட்டுக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரராக சாதனை படைத்துள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டிருந்தபோதும் 2022 கட்டார் உலகக் கிண்ணத்திற்காக அவர் தேசிய அணிக்கு அழைக்கப்படவில்லை. உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றில் மொரோக்கோவிடம் தோற்று ஸ்பெயின் வெளியேறி இருந்தது.

ஸ்பெயினின் அடுத்த போட்டிகள் மார்ச் மாதத்தில் நோர்வே மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு எதிராக உள்ளது. 2024 யூரோ தகுதிகாண் போட்டிகளாகவே இந்த ஆட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<