T20i கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷோன் வில்லியம்ஸ்

100

சர்வதேச T20i போட்டிகளில் இருந்து ஜிம்பாப்வே அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷோன் வில்லியம்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடியது. இத்தொடரை பங்களாதேஷ் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அந்தவகையில், பங்களாதேஷ் அணியுடன் நேற்று (12) நடைபெற்ற ஐந்தாவதும், கடைசியுமான T20i போட்டியுடன் ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் தலைவர் ஷோன் வில்லியம்ஸ் T20i கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்காக 2005ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷோன் வில்லியம்ஸ், அந்த அணிக்காக 14 டெஸ்ட், 156 ஒருநாள் மற்றும் 81 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் டெஸ் கிரிக்கெட்டில் 4 சதங்கள், 3 அரைச் சதங்கள் என 1034 ஓட்டங்களையும், 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல, ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள், 35 அரைச் சதங்களுடன் 4986 ஓட்டங்களையும், 83 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 174 ஓட்டங்களையும் விளாசியுள்ளார்.

இது தவிர, 81 T20i போட்டிகளில் 11 அரைச் சதங்களுடன் 1691 ஓட்டங்களையும், 48 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஜிம்பாப்வே அணி தகுதிபெறாத நிலையில், பங்களாதேஷ் அணியுடனான T20i தொடர் முடிவடைந்தவுடன் ஷோன் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், T20i போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<