பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய ஸ்கொட்லாந்துக்கு 2ஆவது வெற்றி

ICC T20 World Cup – 2021

167
Getty

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண முதல் சுற்றின் ஐந்தாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் B குழுவில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஸ்கொட்லாந்து அணி சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.

ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின், குழு B இற்கான மூன்றாவது போட்டியில் ஸ்கொட்லாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் இன்று (19) பலப்பரீட்சை நடத்தின.

ஓமானின் மஸ்கட் நகரில் உள்ள அல் – அமெராத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்ப வீரர்களான கைல் கொட்சர் 6 ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் முன்சி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஸ்கொட்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பங்களாதேஷ்

அதன்பின் 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெத்திவ் க்ரொஸ் – ரிச்சி பெர்ரிங்டன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கொட்லாந்து அணிக்கு வலுச்சேர்த்தனர்.

இதில் க்ரொஸ் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய ரிச்சி பெர்ரிங்டன் அரைச் சதம் கடந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற, ஸ்கொட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் அதிகபட்சமாக ரிச்சி பெர்ரிங்டன் 70 ஓட்டங்களையும், மெத்திவ் க்ரொஸ் 45 ஓட்டங்களையும் எடுத்தனர். புப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மோரியா 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ச்சாத் சொபர் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் ஓமான் அபார வெற்றி

இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதில் அணித்தலைவர் கிப்லின் டொரீகா 18 ஓட்டங்களையும், சிசி பவு 24 ஓட்டங்களையும் எடுத்து ஆறுதல் கொடுத்தனர். அதேபோல, நோர்மன் வனுஅ (47), கிப்லின் டொரீகா (18) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

இறுதியில், பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 17 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. ஸ்காட்லாந்து சார்பில் ஜோஸுவா டேவி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

T20 உலகக் கிண்ண குழு B இல் முன்னேற்றம் காட்டுமா பங்களாதேஷ் அணி??

ஆட்டநாயகன் விருது ஸ்கொட்லாந்தின் ரிச்சி பெர்ரிங்டனுக்கு அளிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றின், குழு B இற்கான புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் ஸ்கொட்லாந்து அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து அணி – 165/9 (20) – ரிச்சி பெர்ரிங்டன் 70, மெத்திவ் க்ரொஸ் 45, கபுவா மோரியா 31/4, ச்சாத் சொபர் 24/3

பப்புவா நியூ கினியா அணி – 148/10 (19.3) – நோர்மன் வனுஅ 47, சிசி பவு 24, கிப்லின் டொரீகா 18, ஜோஸுவா டேவி 18/4

முடிவு – ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

>> Click here to view full scorecard