ஸ்பெயினின் பிரபல பார்சிலோனா கால்பந்து கழகத்தின் நட்சத்திர மத்தியகள வீரரும் அக்கழகத்தின் தலைவருமான செர்ஜியோ புஸ்கட்ஸ், இந்த பருவகாலத்துடன் பார்சிலோனா கழகத்தில் இருந்து விலகுவுதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து பார்சிலோனா கனிஷ்ட அணிக்காக விளையாடி வந்த புஸ்கட்ஸ், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லாலிகா தொடரில் சிரேஷ்ட பார்சிலோனா அணியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார்.
தற்போது 34 வயதாகும் புஸ்கட்ஸ், இதுவரை பார்சிலோனா அணிக்காக 686 போட்டிகளில் விளையாடியுள்ளார். பார்சிலோனா அணியின் வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி, சேவிக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகளில் அவ்வணிக்காக விளையாடிய வீரர் இவரே ஆவார். புஸ்கட்ஸ் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலப்பகுதியில், அவ்வணி 8 தடவைகள் லாலிகா சம்பியனாகவும், 3 தடவைகள் சம்பியன்ஸ் லீக் சம்பியனாகவும், 7 தடவைகள் கோபா டெல் ரேய் சம்பியன்களாகவும் மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, 2010 இல் கால்பந்து உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியில் புஸ்கட்ஸ் முக்கிய அங்கம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் ஜூன் 30ஆம் திகதி வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள புஸ்கட்ஸ், இந்த பருவகாலம் முடிந்தவுடன், அமெரிக்காவில் மேஜர் லீக் சொக்கர் தொடரில் இன்டெர் மியாமி கழகத்திற்காக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணிக்காக தனது 15 வருட கால சேவையை அளித்ததன் பின்னர் ஒரு கழக ஜாம்பவானாக புஸ்கட்ஸ் பார்சிலோனா அணியில் இருந்து விடை பெறுகிறார்.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<