இன்னிங்ஸ் வெற்றிகளை சுவீகரித்த அலோசியஸ் மற்றும் திரித்துவக் கல்லூரிகள்

114

19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையில் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் ‘சிங்கர் கிண்ண‘ கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

 பண்டாரநாயக்க கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

கதிரான மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்களால் பண்டாரநாயக்க கல்லூரியை வீழ்த்தியது.

நேற்று ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில், 85 ஓட்டங்களுடன் பண்டாரநாயக்க கல்லூரி தமது முதல் இன்னிங்சை நிறைவு செய்திருந்த நிலையில், பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த காலி புனித அலோசியஸ் கல்லூரி ரவிந்து சஞ்சனவின் சதத்துடன் வலுப்பெற்றிருந்தவாறு போட்டியின் இரண்டாம் நாளில் தமது ஆட்டத்தை தொடர்ந்தது.

ரவிந்து சஞ்சன இன்றைய நாளில் 168 ஓட்டங்களுடன் தனது அணியை மேலும் வலுப்படுத்தினார். அவரோடு சேர்த்து பசிந்து நாணயக்காரவும் அரைச்சதம் ஒன்றினை விளாச அவற்றின் உதவியுடன் புனித அலோசியஸ் கல்லூரி 282 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது. பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக ஜனிது ஜயவர்த்தன மற்றும் ஹச்சித்த ஹேமப்பிரிய ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

>> ரவிந்து சஞ்சனவின் சதத்துடன் வலுவடைந்த புனித அலோசியஸ் கல்லூரி

இதனையடுத்து 197 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த பண்டாரநாயக்க கல்லூரி எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க திணறி 67 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. பண்டாரநாயக்க கல்லூரியை நிலைகுலையச் செய்த  ஹரீன் புத்தில 3 விக்கெட்டுகளையும், நிதுக்க மால்ஷித், கவிக தில்ஷான் மற்றும் முன்னர் துடுப்பாட்டத்தில் அசத்திய ரவிந்து சஞ்சன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி அலோசியல் கல்லூரி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 85 (30)தஹிரு ரொஷென் 27, கவிக தில்ஷான் 5/19, ஹரீன் புத்தில 2/5, கவிந்து மதுரங்க 2/12

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 282/6d (80.1)ரவிந்து சஞ்சன 168*, பசிந்து நாணயக்கார 50, ஜனிது ஜயவர்தன 2/55, ஹச்சித்த ஹேமப்பிரிய 2/55

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 67 (29.2)பசிந்து பண்டார 21, ஹரீன் புத்தில 3/18, நிதுக்க மால்ஷித் 2/8, கவிக தில்ஷான் 2/14, ரவிந்து சஞ்சன 2/18


திரித்துவக் கல்லூரி எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்களால் மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரியை வெற்றி கொண்டுள்ளது.

நேற்று ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் திரித்துவக் கல்லூரியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரி கவிஷ்க சேனாதீர, விமுக்தி நெதுமல் மற்றும் திசரு தில்ஷான் ஆகியோரின் அபார பந்துவீச்சினால் 138 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சில் மடக்கப்பட்டிருந்தது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த திரித்துவக் கல்லூரி அணி 35 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களுடன் வலுப்பெற்றிருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. களத்தில் திரித்துவக் கல்லூரியின் தலைவர் ஹசித்த போயகொட 33 ஓட்டங்களுடன் நின்றிருந்தார்.

போட்டியின் இரண்டாம் நாளில் ஹசித்த போயகொட அபார சதம் விளாசி ஆட்டமிழக்காமல் 130 ஓட்டங்களைப் பெற்றார். இவர் பெற்ற சதத்தின் உதவியோடு 77 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 272  ஓட்டங்களுடன் திரித்துவக் கல்லூரி தமது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து 134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித செர்வதியஸ் கல்லூரி வீரர்கள் வெறும் 85 ஓட்டங்களுடன் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியினை தழுவினர். திரித்துவக் கல்லூரியின் பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸ் போல் இம்முறையும் அபாரம் காட்டிய விமுக்தி நெதுமல் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வதியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 138 (59.2)சந்தரு நெத்மின 28, கவிஷ்க சேனாதீர 4/48, திசரு தில்ஷான 3/29, விமுக்தி நெதுமல் 3/41

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 272/4d (77)ஹசித்த போயகொட 130*, பூர்ண வனசேகர 49

புனித செர்வதியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 85 (32.2)சஷிக துல்ஷான் 27, விமுக்தி நெதுமல் 5/27


இசிபதன கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

இசிபதன மற்றும் டி.எஸ் சேனநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான இப்போட்டி சமநிலை அடைந்ததுடன், போட்டியின் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் இசிபதன கல்லூரி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டது.

கோல்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியில் அயன சிறிவர்தனவின் சதத்துடன் இசிபதன கல்லூரியானது 278 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சை நிறைவு செய்து கொண்டது. அதற்கு அடுத்து டி.எஸ் சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்சை ஆரம்பித்து விக்கெட் இழப்பு ஏதுமின்றி 3 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

>> இலங்கைக்கு ஒழுங்கற்ற மைதானம் வழங்கப்பட்ட விடயம் குறித்து விசாரணை

போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி இசிபதன கல்லூரியின் சஞ்சுல பண்டாரவின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் 50.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அபாரம் காட்டிய சஞ்சுல 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஒன் (Follow on) முறையில் மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்ட டி.எஸ் சேனநாயக்க கல்லூரிக்கு விஹான் குணசேகர (70) மற்றும் முதித லக்ஷான் (54) ஆகியோர் அரைச்சதம் விளாசி நல்லதொரு மொத்த ஓட்ட எண்ணிக்கையை உருவாக்கியிருந்தனர். இவ்வொறனதொரு நிலையில் 183 ஓட்டங்களுக்கு டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்திருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவடைய போட்டி சமநிலை அடைந்தது.

இசிபதன கல்லூரி சார்பாக பந்து வீச்சில் எஷான் பெர்னாந்து, மதுஷிக சந்தருவன் மற்றும் லஹிரு தில்ஷான் ஆகிய இளம் பந்துவீச்சாளர்கள் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் சுருட்டியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 278 (77.1) அயன சிறிவர்த்ன 101, சமில் விக்ரமதிலக 71, லெஷான் அமரசிங்க 39, சனதரு சன்தித்த 2/20, ருவின் பீரிஸ் 2/20

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (முதலாம் இன்னிங்ஸ்) – 118 (50.4)ருவின் பீரிஸ் 28, சஞ்சுல பண்டார 5/35, அயன சிறிவர்தன 2/10, லஹிரு தில்ஷான் 2/11

டி. எஸ் சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 183/7 (53)விஹான் குணசேகர 70, முதித க்ஷான் 54, ஷான் பெர்னாந்து 2/21, மதுஷி சந்தருவன் 2/38, லஹிரு தில்ஷான் 2/38


தர்மபால கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

கண்டி தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் நிறைவடைந்த இந்தப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதல் இன்னிங்சின் அடிப்படையில் கொழும்பு தர்மபால கல்லூரி வெற்றியாளராக மாறியது.

போட்டியின் முதல் நாளில் தமது முதல் இன்னிங்சை 256 ஓட்டங்களுக்கு மைதான சொந்தக்காரர்களான தர்மராஜ கல்லூரி அணியினர் நிறைவு செய்திருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக தர்மபால கல்லூரி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து போட்டியின் முதல் நாளின் இறுதியில் இருந்தவாறு இரண்டாம் நாளை ஆரம்பித்தனர்.

தர்மபால கல்லூரிக்காக அவிஷ்க ஹசரிந்த சதம் கடந்து 108 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்தோடு சமிது லக்ஷித பெற்ற 42 ஓட்டங்களுடன் உறுதியடைந்த தர்மபால கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 83.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 264 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தர்மராஜ கல்லூரியின் பந்து வீச்சில் நவீந்திர தில்ஷான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து 8 ஓட்டங்கள் பின்னடைவாக தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கண்டி தர்மராஜ கல்லூரி 34 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனால் சமநிலை அடைந்த இப்போட்டியில் தர்மராஜ கல்லூரி சார்பாக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய துலாஜ் பண்டார அரைச்சதம் ஒன்றைப் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 256/9d (71.3)கசுன் குணவர்தன 82, சேதிய ஏக்கநாயக்க 57, சமிது லக்ஷித 6/51

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 264 (83.2) அவிஷ்க ஹசரிந்த 108, சமிது லக்ஷித 42, நவீந்திர தில்ஷான் 3/32

தர்மராஜ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 119/7 (34)துலாஜ் பண்டார 62, தில்ஷான் டி சில்வா 3/38