Vantage FA கிண்ணம் பொலிஸ் அணி வசம்

87
VANTAGE FA Cup 2019

இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 5-4 என வீழ்த்திய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 11 ஆண்டுகளின் பின்னர் Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் சம்பியன் கிண்ணத்தை முதல் முறை சுவீகரித்தது.

கொழும்பு குதிரைப்பந்தய திடல் அரங்கில் இன்று (7) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முழு நேரம் முடியும்போது இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்ற நிலையிலேயே வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி வழங்கப்பட்டது. 

தினேஷின் அபாரத் தடுப்பினால் புளு ஸ்டாரை வீழ்த்தி பொலிஸ் இறுதிப் போட்டியில்

களுத்துறை புளு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 4-2 என வீழ்த்திய இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழக அணி இம்முறை Vantage FA

இதில் சோண்டர்ஸ் அணி மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தை சந்தித்தது. கடந்த பருவத்திலும் இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்ட அந்த அணி டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்திடம் கிண்ணத்தை இழந்தது. மறுபுறம் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் FA கிண்ணத்தை வெல்வது இது முதல் முறையாகும்.  

போட்டியின் ஆரம்ப விசில் ஊதப்பட்ட விரைவிலேயே பொலிஸ் அணி பந்தை எதிரணி கோல் பகுதிக்கு எடுத்தச் சென்ற நிலையில் சோண்டர்ஸ் இழைத்த தவறால் முதல் நிமிடத்திலேயே அந்த அணிக்கு ப்ரீ கிக் ஒன்று கிடைத்தது. எனினும் சத்துர குணரத்ன உதைத்தபோதும் எதிரணி கோல்காப்பாளர் நெருக்கடி இன்றி தடுத்தார்.

இரு அணிகளும் மந்தமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய நிலையில் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் பந்து அதிகம் மைதானத்தின் நடுவிலே சுழன்றுகொண்டிருந்தது. குறிப்பாக, பந்தை பரிமாற்றுவதில் இரு அணிகளும் தடுமாற்றம் கண்டன. 

எனினும் 16 ஆவது நிமிடத்தில் பத்திரன உதைத்த கோணர் கிக் பொலிஸ் அணிக்கு கோல் வாய்ப்பொன்றை நெருங்கச் செய்தது. இந்நிலையில் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் விறுவிறுப்பு அதிகரித்தபோதும் இரு அணிகளாலும் கோல் பெற முடியவில்லை.

குறிப்பாக, முதல் பாதியில் இலங்கையின் பலம்மிக்க கழகங்களில் ஒன்றான சோண்டர்ஸை விடவும் பொலிஸ் அணி அதிகம் பந்தை தம்வசம் தக்கவைத்துக்கொண்டு கோல் முயற்சியில் ஈடுபட்டதை காணமுடிந்தது. இதன்போது, இரு அணிகளின் பல வீரர்களும் தவறுகளைச் செய்து மஞ்சள் அட்டைகளையும் பெற்றனர். 

முதல் பாதி: பொலிஸ் வி.க 0 – 0 சோண்டர்ஸ் வி.க  

இரண்டாவது பாதி ஆட்டமும் விறுவிறுப்புடன் ஆரம்பமானதோடு 48 ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் பெனால்டி பெட்டிக்குள் இருந்து தலையால் முட்டி கோல் பெற சுபைக் முயன்றபோது அந்தப் பந்து நேராக கோல் காப்பாளரிடம் சென்றது.

எனினும், இரண்டு நிமிடங்களின் பின் பொலிஸ் அணி முதல் கோலை பெற்றது. ரிப்கான் பந்தை வேகமாக முன்னோக்கி எடுத்துவந்து கோல்காப்பாளரைத் தாண்டி வலைக்குள் செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து பதில் கோல் திருப்புவதற்கு சோண்டர்ஸ் அணி தீவிரம் காட்டியது. எதிரணி கோல் பகுதியை தொடர்ச்சியாக அந்த அணி ஆக்கிரமிப்பதை காணமுடிந்தது. 

புளு ஈகல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய சோண்டர்ஸ்

Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் புளு ஈகல்ஸ் விளையாட்டுக்

இந்நிலையில் 54 ஆவது நிமிடத்தில் பொலிஸ் கோல்காப்பாளர் தினேஷ் பெனால்டிப் பெட்டிக்குள் இழைத்த தவறால் சோண்டர்ஸ் அணிக்கு ஸ்பொட் கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை பயன்படுத்திக் கொண்டு தேசிய அணியின் மத்தியகள வீரர் நிரேஷ், சோண்டர்ஸ் அணிக்காக பதில் கோல் திருப்பினார்.

இதனைத் தொடர்ந்து கடைசி 26 நிமிடங்களிலும் இரு அணிகளினதும் வெற்றி கோலை பெறும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. தொடர்ந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல் பெறாததால் போட்டியின் முடிவு பெனால்டி உதைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது. 

முழு நேரம்: பொலிஸ் வி.க 1 – 1 சோண்டர்ஸ் வி.க1`    

பெனால்டி

சோண்டர்ஸ் – நிரேஷ் உதைத்த பந்து கோலானது

பொலிஸ் – சத்துர குணரத்ன உதைத்த பந்து கோலானது

சோண்டர்ஸ் – தரூஷ ரங்கன உதைத்த பந்து தடுக்கப்பட்டது

பொலிஸ் – லங்கேஷ்வர உதைத்த பந்து கோலானது

சோண்டர்ஸ் – குர்ஷித் உதைத்த பந்து கோலானது

பொலிஸ் – குமார உதைத்த பந்து கோலானது

சோண்டர்ஸ் – உதார உதைத்த பந்து கோலானது

பொலிஸ் – ரிப்கான் உதைத்த பந்து கோலானது

சோண்டர்ஸ் – சலன சமீர உதைத்த பந்து கோலானது

பொலிஸ் – தினூஷ உதைத்த பந்து கோலானது

பெனால்டி முடிவு: பொலிஸ் வி.க 5 – 4 சோண்டர்ஸ் வி.க  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க