எதிரணி வீரரின் நிறம் பற்றி கருத்து வெளியிட்ட சர்ச்சையில் சர்ப்ராஸ்

758
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான சர்ப்ராஸ் அஹ்மட், தென்னாபிரிக்க அணி வீரரான அன்டைல் பெஹ்லுக்வாயோவின் நிறம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினால் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்.

தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி செவ்வாய்க்கிழமை (22) டர்பன் நகரில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்த வெற்றி இலக்கினை (204) அடைவதற்கு தென்னாபிரிக்க அணி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிக் கொண்டிருந்தது. களத்தில், அன்டைல் பெஹ்லுக்வாயோ மற்றும் வேன்டன் டேர் சன் ஆகியோர் இருந்தனர்.

ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்களை பெற்ற …

இப்படியான ஒரு நிலையில் தென்னாபிரிக்க அணிக்காக 37ஆவது ஓவரினை எதிர்கொண்ட பெஹ்லுக்வாயோ தனது கன்னி ஒரு நாள்  அரைச்சதத்தினை நெருங்கும் போது, விக்கெட் காப்பாளராக இருந்த பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹ்மட் உருது மொழியில் ஏதோ பேசியிருந்தார். சர்பராஸ் பேசியது விக்கெட்டுக்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலி வாங்கியில் பதிவானது.

ஒலி வாங்கியில் பதிவான வார்த்தைகளை மொழி பெயர்ப்பு செய்த போது, அன்டைல் பெஹ்லுக்வாயோவினை சர்ப்ராஸ் அஹ்மட் அவரது நிறத்தினை சாடும் வகையில் “கறுப்பர் என அழைத்தமை தெரியவந்தது.

இப்படியாக தனது எதிரணி வீரர் ஒருவரின் நிறத்தை சாடும் வகையில் அழைத்தமைக்காக சர்ப்ராஸ் அஹ்மட், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.சி.சி. 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த இனரீதியான விதிமுறை கோவைகளின் அடிப்படையில், மைதானத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களையோ, போட்டி சார்ந்த உத்தியோகத்தர்களையோ அல்லது பார்வையாளர்களையோ நிறத்தை வைத்து பேசுதல் குற்றமாக கருதப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே பெஹ்லுக்வாயோவின் நிறம் சார்ந்த இந்த கருத்திற்கு சர்ப்ராஸ் அஹ்மட் தண்டனை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது பாகிஸ்தான்அணி

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான …

சர்பராஸ் நிறத்தினை சாடும் வகையில் பேசிய இந்த விடயம், தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குறித்த  போட்டியின் நடுவர்கள், மத்தியஸ்தர் அல்லது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பிரதிநிதி ஒருவர் மூலம் ஐ.சி.சி. இடம் முறைப்பாடு செய்யப்பட்டு சர்ப்ராஸ் அஹ்மட்டிற்கு தண்டனைகள் பெற்றுத்தரப்படும் எனக் கூறப்படுகின்றது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கில் பேசியிருந்த சர்ப்ராஸ் அஹ்மட், நிறம் தொடர்பான கருத்திற்கு மன்னிப்பு கோரியதுடன், யாரினையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசியிருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), நேற்று (24) வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தமது அணித்தலைவரின் இந்த கருத்திற்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளதோடு, குறித்த சம்பவத்திற்கு மன்னிப்பையும் கோரி எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதையும் உறுதி செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை சர்ப்ராஸ் அஹ்மட்டின் இந்த கருத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையோடு மட்டுமல்லாது சொஹைப் அக்தார் உட்பட்ட முன்னாள் வீரர்களும் தங்களுடைய கண்டனங்கள் வெளியிட்டுள்ளதோடு, உலகம் பூராகவும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களும் தங்களது எதிர்ப்பினை காட்டியிருக்கின்றனர்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<