அணித்தலைவர் பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் சர்பராஸ் அஹ்மட்

0
AFP

அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாததன் காரணமாக பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் T20 அணித்தலைவர் பதவிகளிலிருந்து சர்பராஸ் அஹ்மட்  அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார். 

சர்பராஸ் அஹ்மட் நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவராக அசார் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, T20 அணித்தலைவராக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம்…..

எனினும், பாகிஸ்தான் ஒருநாள் அணித் தலைவர் பதவியிலிருந்து சர்பராஸ் அஹ்மட்டை மாற்றம் செய்வது தொடர்பில் இன்னும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை.  

கடந்த 2017ஆம் ஆண்டில், பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்ட சர்பராஸ் அஹ்மட் இதுவரையில் 13 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வழிநடாத்தியிருக்கின்றார். இவற்றில், ஒரு போட்டி சமநிலை அடைய பாகிஸ்தான் 8 போட்டிகளில் தோல்வியினை தழுவியிருக்கின்றது. எனினும், சர்பராஸ் அஹ்மட் 4 போட்டிகளில் மாத்திரமே பாகிஸ்தானை வெற்றிப்பாதையில் வழிநடாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் சர்பராஸ் அஹ்மட் மூலம் வழிநடாத்தப்பட்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகவும் தவறியிருந்தது. இன்னும் பாகிஸ்தான் அணி, இளம் வீரர்களுடன் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் அண்மையில் நடைபெற்ற T20 தொடரிலும் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருந்தது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்புக்களில் இருந்து சர்பராஸ் அஹ்மட் நீக்கப்பட்டது தொடர்பில் பேசியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் எஹ்சான் மணி இவ்வாறு தெரிவித்திருந்தார். 

”ஒரு தலைவராகவும், வீரராகவும் ஜொலித்த சர்பராஸ் அஹ்மட்டை பதவி விலக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு முடிவு.“  

”எனினும், அவர் (சர்பராஸ் அஹ்மட்) நம்பிக்கை இழந்திருப்பதையும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருப்பதையும் அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில், அணியின் நன்மையை கருதி அவரை குறித்த பதவிகளிலிருந்து விலக்குவதன் மூலம், அவரின் பழைய ஆட்டத்திற்கு அவர் திரும்ப ஒரு வாய்ப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.”

புதிய தலைவர்கள் மூலம் தற்போது வழிநடாத்தப்படவுள்ள பாகிஸ்தான் அணி, நவம்பர் மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கே T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<