நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 17 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் சில முக்கிமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை அணியின் மத்தியவரிசையில் ஓட்டங்களை பெறத்தவறிவந்த சதீர சமரவிக்ரம அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
>>இலங்கைக்கு எதிரான தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு<<
சதீர சமரவிக்ரமவுக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ இலங்கை ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த குசல் பெரேரா, துஷான் ஹேமந்த மற்றும் டில்சான் மதுசங்க போன்ற வீரர்களும் நியூசிலாந்து தொடருக்கான குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் எசான் மாலிங்க அணியில் இடத்தை பிடித்துள்ளதுடன், அனுபவ வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் ஒருநாள் குழாத்துக்கு திரும்பியுள்ளார்.
குறிப்பிட்ட இந்த மாற்றங்களை தவிர்த்து வேறு மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளதாதுடன், உபாதைக்குள்ளாகியிருந்த வனிந்து ஹஸரங்க, வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க ஆகியோரையும் அணியில் தக்கவைத்துள்ளது.
அதேநேரம் துடுப்பாட்ட பிரகாசிப்பின்மை காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த போதும், கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் ஓட்டங்களை குவித்திருந்த அவிஷ்க பெர்னாண்டோவும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் 5, 8 மற்றும் 11ம் திகதிகளில் முறையே வெலிங்டன், ஹெமில்டன் மற்றும் ஆக்லேண்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிசான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், லஹிரு குமார, எசான் மாலிங்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<