அசலன்கவிற்கு குமார் சங்கக்காரவின் விஷேட அறிவுரை

250

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவீரராக நாடு திரும்பியிருக்கும் இடதுகை துடுப்பாட்டவீரரான சரித் அசலன்கவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

T20 உலகக் கிண்ணத்தில் 6 இன்னிங்கஸ்களில் இலங்கை அணிக்காக ஆடிய சரித் அசலன்க அதில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 231 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவ்வாறான சிறப்பு துடுப்பாட்டம் ஒன்றினை வெளிப்படுத்திய சரித் அசலன்கவிற்கு குமார் சங்கக்கார வழங்கிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

>>அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

சரித் அசலன்க மிகவும் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றார். அவர் இலங்கை அணிக்காக நீண்ட காலம் விளையாடக்கூடிய, அதிக ஓட்டங்களைப் பெறக்கூடிய, இலங்கை அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுத்தரக்கூடிய ஆளுமைகளை கொண்டுள்ள ஒருவராக தெரிகின்றார்.”

சரித் அசலன்க 147 என்கிற ஓட்டவேகத்தில் (Strike Rate) இந்த T20 உலகக் கிண்ணத்தில் ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, அவர் அரைச்சதங்கள் பெற்ற போட்டிகளில் (பங்களாதேஷ் – 80, மேற்கிந்திய தீவுகள் – 68) இலங்கை அணி வெற்றிகளையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதோடு இலங்கை அணிக்கு நீண்டகாலத்தேவையாக இருந்த 3ஆம் இலக்கத்துடுப்பாட்ட வீரருக்குரிய தேவையினையும் சரித் அசலன்க பூர்த்தி செய்திருப்பதாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கைக்குரிய வீரராக மாறியிருக்கும் சரித் அசலன்கவிற்கு குமார் சங்கக்கார சிறப்பு அறிவுரை ஒன்றினையும் வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவர் சுழல் மற்றும் வேகப் பந்துவீச்சுக்களை கையாள்கின்ற திறன் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. அதோடு அவர் பயமின்றிய துடுப்பாட்ட முறையொன்றினையும் கையாள்கின்றார். அதுவும், நல்ல விடயமாக காணப்படுகின்றது. அணியொன்று மாற்றத்துக்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தில் பல விடயங்களை அவதானிக்க வேண்டிய நிலையொன்று உள்ளது. இப்படியாக இருக்கும் போது எந்தவீரருக்கும் இருக்கும் முக்கிய சிக்கல் சிறிய பயம் ஒன்று உருவாகுவதாகும். இது தோல்விக்கான பயமாகும்.

உங்களை அணியில் இருந்து நீக்குகின்ற சந்தர்ப்பம் ஒன்று வரும் என்கிற போது நீங்கள் துணிச்சலுடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கு பயப்பட முடியும். ஆனால் சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது அது எதிரணியில் அழுத்தங்களை உருவாக்கும். சரித் இந்த விடயத்தில் அனைத்து கோணங்களிலும் விடுபட வேண்டும். அவரிடம் சமநிலை உள்ளது. அவரிடம் ஆட்டம் உள்ளது. எனவே, இப்போதிலிருந்து அவர் தனது மன ஆற்றல்களை ஒன்றிணைக்க வேண்டும். அதோடு வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்ப, வெவ்வேறு எதிரணிகளுக்கு ஏற்ப தனது ஆட்டத்தினை அவர் ஒருங்கிணைக்க வேண்டும். அவர் சிறந்தவீரராக உருவெடுப்பார் என்பதனை வெளிப்படையாகச் சொல்வதற்குரிய பல விடயங்கள் இப்போதே காணப்படுகின்றன.”

>>அடுத்த T20 உலகக் கிண்ணத்திலும் முதல் சுற்றில் ஆடவுள்ள இலங்கை

இலங்கை அணி இந்த T20 உலகக் கிண்ணத்தில் அரையிறுதிப் போட்டிக்கு செல்லாத போதிலும் சுபர் 12 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருந்ததுடன் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்த போதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது. அதோடு, T20 உலகக் கிண்ண முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி, T20 உலகக் கிண்ணத்தில் தாம் மொத்தமாக விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.

அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணி அனுபவமற்ற வீரர் தொகுதியொன்றுடன் இந்த T20 உலகக் கிண்ணத்தொடரில் திறமையினை வெளிப்படுத்தி அனைவரினதும் கவனத்தினை ஈர்த்த விடயம் தொடர்பிலும் 2014ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை வென்ற இலங்கை அணியில் காணப்பட்ட குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டிருந்தார்.

ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, இந்த தொடரில் பாராட்டும் விதமான ஆட்டமாக (இலங்கை அணியின் ஆட்டம்) இருந்தது. இது கடினமான வேலையாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எல்லோரினதும் மனதில் இது (T20 உலகக் கிண்ணத்திற்கான) சரியான அணிதானா என்ற கேள்விகளும் இருந்தன. அதிக அழுத்தம் காணப்படுகின்ற தொடர்களில், இந்த வீரர்களுக்கு சர்வதேச தரங்களுக்கு ஏற்றவாறு ஆடும் ஆற்றல் இருந்ததா என்பது தொடர்பிலும் கேள்விகள் இருந்தன. வரலாற்றினையும், சம்பிரதாயங்களையும் நோக்கும் போது இலங்கை சிறந்த கிரிக்கெட் அமைப்பினை கொண்ட அணியாக இருந்ததனை T20 உலகக் கிண்ணங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது.

எனவே, இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த அணியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் மிகவும் சிறந்த கிரிக்கெட்டினை விளையாடியிருந்தனர். அவர்கள் பயமின்றிய அணியாகவும் இருந்தனர். அவர்கள் போட்டிகளின் அதிக கட்டங்களில் ஒருமுகப்படுத்தப்பட்ட அணியாக இருந்தனர்.

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி நவம்பர் 15ஆம் திகதி T20 அணிகள் தரவரிசையில் 09ஆம் இடத்தில் காணப்படும் காரணத்தினால் இப்போதைய T20 உலகக் கிண்ணம் போன்று அடுத்த (2022ஆம் ஆண்டுக்கான) T20 உலகக் கிண்ணத்திலும் நேரடியாக சுபர் 12 சுற்றில் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றது. எனினும், இப்போதிருக்கின்ற வீரர்கள் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்காலத்தில் திறமையான ஒரு அணியாக மாறும் என குமார் சங்கக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

>>WATCH – T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரகாசிப்பு தொடர்பில் கூறும் ஷானக!

இப்போது தான் பயணம் ஆரம்பித்திருக்கின்றது. அதோடு நீங்கள் அதிகமாக சரித் அசலன்க பற்றிப் பேசுவதனை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் நீங்கள் முழுத்தொகுதியினையும் ஒன்றாகப் பார்க்கும் போது, இந்த சிறிய வயதில் வனிந்து ஹஸரங்க T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றார். உங்களிடம் ஆரம்பம் ஒன்றினை இருப்பதனை அவதானிக்க முடியுமாக உள்ளது. இது தொடராகவும் தொடர்ச்சியாகவும் விருத்தி செய்யப்படும் போது, குறிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இது பாரிய உந்துசக்தியாக உருவெடுக்கும்.

T20 உலகக் கிண்ணத்தினை அடுத்து இலங்கை வீரர்கள் விளையாடும் அடுத்த T20 தொடராக அவுஸ்திரேலிய அணியுடன் 2022ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் அமைகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<