சமரவீரவிற்கு மீண்டும் ஒரு பொறுப்பு

419
Samaraweera

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர பங்களதேஷ் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையிலே சமரவீரா துடுப்பாட்ட பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த மாதம் இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான வங்கதேச அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அவர் துடுப்பாட்ட ஆலோசனை வழங்குவார்.

மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு மேதையும் தலைவருமான கார்ட்னி வால்ஷ் வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பங்களாதேஷ் வாரியமோ, கார்ட்னி வால்ஷோ எதுவும் தெரிவிக்கவில்லையென்றாலும் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ செய்திகளின் படி 2019 உலகக்கோப்பை தொடர் வரை கார்ட்னி வால்ஷ் வங்கதேச பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து பெரிய திமிங்கிலத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடித்துப் போட்டுள்ளதாகவே தெரிகிறது. கார்டன் கிரீனிட்ஜுக்குப் பிறகு ஒரு மேற்கிந்திய தீவுகள் வீரர் வங்கதேச அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக்கின் பயிற்சி காலக்கட்டத்தில் தங்கள் சொந்த மண்ணில், தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளை ஒருநாள் தொடரில் வென்று சாதித்ததோடு 2015 உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி இந்தியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.