தேசிய நகர்வல ஓட்ட சம்பியன்களாக முடிசூடிய சந்திரதாசன், மதுஷானி

138

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இவ்வருடத்துக்கான 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக இடம்பெற்ற நகர்வல ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் சம்பியனாக மத்திய மாகாணத்தின் எஸ். சந்திரதாசனும் பெண்கள் பிரிவில் சம்பியனாக கிழக்கு மகாணத்தின் ஹிமாஷா மதுஷானி நந்தசேனவும்தெரிவாகினர்.

கடந்த வருடத்தைப் போல இம்முறையும் நகவர்ல ஓட்டப்போட்டிகள் நேற்றையதினம்(18) நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது.

ஆசிய பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளில் பிரகாசித்த இலங்கையர்கள்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்….

வழமையாக ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டி 12 கிலோ மீற்றர் தூரத்தையும் பெண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டி 8 கிலோ மீற்றர் தூரத்தையும் கொண்டதாக நடத்தப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு போட்டிகளும் 10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள் 24 செக்கன்களில் நிறைவுசெய்து சந்திரதாசன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற நகர்வல போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட வீரர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதேநேரம், நடப்புச் சம்பியனான மத்திய மாகாணத்தைச் சேர்ந்த லயனல் சமரஜீவ(33 நிமி. 31.20 செக்) வெள்ளிப் பதக்கத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த டி.எம் எரந்த தென்னகோன்(33 நிமி. 33.41 செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்நிலையில் பெண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 39 நிமிடங்கள் 48 செக்கன்களில் நிறைவுசெய்து ஹிமாஷா மதுஷானி நந்தசேன தங்கப் பதக்கத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஷாமிலி அனுஷா லமாஹேவகே(40 நிமி. 11.32 செக்) வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பி.ஜி.எல் அநுராதி(40நிமி. 19.31 செக்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், பெண்கள் பிரிவில் நடப்புச் சம்பியனான தென் மாகாணத்தைச் சேர்ந்த கயந்திகா அபேரத்ன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவைக் கருத்திற்கொண்டு இம்முறை போட்டித் தொடரில் கலந்துகொள்ளவில்லை.

ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

இதேவேளை, இப்போட்டியில் உண்மையான வெற்றியாளர்களாக முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சமன்த புஷ்பகுமார மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகியோருக்கு பரிசுகளை வழங்குவதை விளையாட்டுத்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

குறித்த வீரர்கள் இருவரும், கடந்த வாரம் இந்தோனேஷியாவில் நிறைவுற்ற ஆசிய விளையாட்டு விழா பரீட்சார்த்த போட்டிகளில் இலங்கை அணியைப் பிரநிதிதித்துவப்படுத்தி இருந்ததுடன், 3000 மீற்றர் தடைதாண்டலில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களையும், ஆண்களுக்கான 5000 மீற்றரில் புஷ்பகுமார வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 1500 மீற்றரில் நிலானி ரத்னாயக்க தனிப்பட்ட சிறந்த காலத்துடன் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், தேசிய விளையாட்டு விழாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் போட்டி நடைபெறுகின்ற தினத்தன்று அதிகாலை நாடு திரும்பிய குறித்த வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும் நோக்கில் நுவரெலியாவுக்குச் சென்றுள்ளனர்.

எனினும், நகர்வல ஓட்டப் போட்டிக்காக குறித்த வீரர்கள் இருவரும் உரிய நேரத்தில் வருகைதந்து பதிவுசெய்யாத காரணத்தால், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த விளையாட்டு அதிகாரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்களது பங்கேற்பு உத்தியோகபூர்வமற்றது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் திகதி பூட்டானில் நடைபெறவுள்ள தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகளின் தகுதிகாண் போட்டிகளாக கருதி நேரக் கணிப்பை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த வீரர்களை சுயாதீன வீரர்களாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆண்கள் பிரிவில் கலந்துகொண்ட சமன்த புஷ்பகுமார, 33 நிமிடங்கள் 22 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், பெண்கள் பிரிவில் நிலானி ரத்னாயக்க போட்டியை 39 நிமிடங்கள் 33 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும் பெற்றுக்கொண்டனர். இதன்படி, ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை குறித்த வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும், நகர்வல ஓட்டத்தில் ஆண்கள் குழு நிலை சம்பியன்களாக மத்திய மாகாணமும், 2ஆவது இடத்தை ஊவா மாகாணமும், 3ஆவது இடத்தை வட மத்திய மாகாணமும் பெற்றுக்கொண்டதுடன், பெண்கள் பிரிவு சம்பியன்களாக மத்திய மாகாணம் முடிசூடிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை நகர்வலப் போட்டிகளில் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களையும் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன், ஆண்களுக்கான போட்டியில் 82 வீரர்களும், பெண்களுக்கான போட்டியில் 47 வீராங்கனைகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.