பங்களாதேஷ் T20i தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரானது முன்னதாக மே 25 ஆம் திகதி முதல் ஜுன் 3ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரன் இறுதிப் போட்டி குறித்த தினத்திற்கு மாற்றப்பட்டதால் மே 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த T20i தொடர் 3 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளதுடன், மே 28, 30 மற்றும் ஜுன் 01 ஆகிய திகதிகளில் இந்த தொடர் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பங்களாதேஷ் T20i தொடருக்கான பாகிஸ்தன் அணி இன்று (21) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய T20i குழாத்தில் இடம்பிடித்த 8 வீரர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதன்படி, பாகிஸ்தான் T20i அணியின் தலைவராக சல்மான் அலி ஆகாவும், அணியின் உப தலைவராக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த சைம் அய்யூப் மற்றும் ஃபகர் ஸமான் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
- பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஷோன் டைட்
- பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை ஒத்திவைத்தது PCB
இதனிடையே, கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் ஒரேயொரு T20i போட்டியில் மட்டும் விளையாடியிருந்த ஹசன் அலிக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் கடைசியாக கடந்தாண்டு டப்ளினில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான T20i போட்டியில் விளையாடிருந்தார்.
தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹசன் அலி, இந்தத் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இறுதியாக நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அணியிலிருந்து கலட்டிவிடப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகிய இருவரும் இந்தத் தொடரிலும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன்; அப்ரிடிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 3 வீரர்களும் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் அவர்களின் செயல்பாடும் மோசமாக இருந்ததன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, மைக் ஹெஸன் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20i அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டதன் பிறகு பாகிஸ்தான் அணி விளையாடுகின்ற முதல் தொடர் இதுவாகும்.
பாகிஸ்தான் T20i அணி: சல்மான் அலி ஆகா (தலைவர்), ஷதாப் கான் (உப தலைவர்), அப்ரார் அஹமட், பஹீம் அஷ்ரப், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, மொஹமட் ஹாரிஸ், மொஹமட் வசீம் ஜூனியர், ஹெம்மட் இர்பான் கான், நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சைம் அய்யூப்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<