வெற்றியுடன் SAFF தொடரை ஆரம்பிக்குமா இலங்கை?

SAFF Championship 2021

362

நாளை மாலைதீவுகளில் ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரின் 13ஆவது அத்தியாயத்தின் முதல் போட்டியில், இலங்கை அணி மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தெற்காசியாவின் கால்பந்து ஜாம்பவான் யார் என்பதை மதிப்பிடும் இந்த தொடர் 2020ஆம் அண்டு இடம்பெற இருந்தது. எனினும், கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக, தொடர் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்முறை தொடர் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாலைதீவுகளின் தேசிய கால்பந்து அரங்கில் இடம்பெறவுள்ளன.

இம்முறை தொடரில் பூட்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்காத காரணத்தினால் இலங்கை, இந்தியா, பங்களளாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவுகள் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன. அதேபோன்று, இம்முறை தொடரின் முதல் சுற்று முழுமையாக லீக் முறையில் இடம்பெறவுள்ளது.

எனவே, நாளை ஆரம்பமாகவுள்ள தொடரின் முதல் போட்டியில் பங்பேற்கவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் குறித்த பார்வையினை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பங்களாதேஷ் – இலங்கை இடையிலான போட்டி முடிவுகள்

  • மோதியுள்ள போட்டிகள் – 16
  • பங்களாதேஷ் வெற்றி – 10
  • இலங்கை வெற்றி – 04
  • சமநிலை – 02

கடந்த கால போட்டி முடிவுகளைப் பார்க்கின்றபோது பங்களாதேஷ் இலங்கையை விட சிறந்த நிலையில் உள்ளது. எனினும், இறுதியாக கடந்த 2019ஆம் அண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில் (Friendly Match) மொஹமட் பசாலின் கோலின் மூலம் இலங்கை அணி 1-0 என வெற்றி பெற்றது.

எனவே, கடந்த காலங்களில் இலங்கை அணி ஒரு மாற்றத்தை காண்பிக்கும் வகையில் முன்னேற்றம் கண்டு வருவதாக பலர் மத்தியிலும் கதைக்கப்படுகின்றது. எனவே, நாளைய இந்த ஆட்டம் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது.

இலங்கை அணி

சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணியை நோக்கும்போது, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடிய அதிகமான வீரர்கள் இந்த குழாத்தில் இருக்கின்றமை இலங்கைக்கு ஒரு வகையில் சாதகமாகவே அமையும். விளையாடும் விதத்திலும், வீரர்களின் நிலைகளிலும் (Positions) மாற்றங்கள் ஏற்பட்டாலும், கடந்த காலங்களைப் போன்று தடுப்பு ஆட்டத்தை மேற்கொள்ளாமல், எதிரணியின் கோல் எல்லையிலும் இலங்கை வீரர்கள் விளையாட வேண்டிய தேவை உள்ளது.

டக்சன் பியுஸ்லஸ்

இலங்கை அணியில் வீரர்களின் நிலைகளின் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றே நம்பப்படுகின்றது. அதேபோன்று, இலங்கை வீரர்கள் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னர் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு பயிற்சி ஆட்டங்களிலும் ஆடவில்லை. இவை இலங்கைக்கு சற்று சவாலான விடயமாக அமையும்.

குறிப்பாக, இந்த தொடரில் ஆடும் ஏனைய 4 அணிகளுடன் ஒப்பிடும்போது போட்டி அனுபவத்தில் இலங்கை இறுதி இடத்தில் உள்ளது.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், பின்கள வீரர்களின் ஆட்டம் இலங்கைக்கு முழுமையான பலமாக இருக்க வேண்டும். குறிப்பாக, டக்சன் பியுஸ்லஸ் மற்றும் சரித்த ரத்னாயக்க, ஷமோத் டில்ஷான் போன்ற வீரர்களின் பங்களிப்பு கோல் காப்பாளர் சுஜான் பெரேராவுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று, அனுபவம் கொண்ட வீரர்களான வசீம் ராசிக், கவிந்து இஷான் மற்றும் அசிகுர் ரஹ்மான் போன்றவர்கள் மத்திய களம் மற்றும் முன்களத்தில் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

வசீம் ராசிக்

குறிப்பாக போட்டி இடம்பெறும் மாலைதீவு தேசிய கால்பந்து அரங்கில் கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய அனுபம் சிரேஷ்ட வீரர்களான சுஜான் பெரேரா மற்றும் டக்சன் பியுஸ்லஸ் ஆகியோருக்கு இருக்கின்றமை இலங்கைக்கு ஒரு சாதகமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

அது போன்றே இங்கிலாந்தில் கழக மட்டத்தில் ஆடும் வீரர்களான டிலொன் டி சில்வா மற்றும் மார்வின் ஹமில்டன் ஆகியோர் சிறந்த பலமாக இலங்கைக்கு இருப்பர். எனினும், இந்த தொடருக்கான பயிற்சிகளில் இவர்கள் இருவரும் குழாத்துடன் இருக்காமை, இவர்கள் ஏனைய வீரர்களுடன் எவ்வாறு சிறப்பாக இணைவார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

எவ்வாறாயினும், அணியின் திட்டம் சிறந்த முறையில் களத்தில் செயற்படுத்தப்படும் எனில், இலங்கைக்கு நிச்சயம் சாதகமான பெறுபேறு கிடைக்கும்.

இலங்கை அணியின் இறுதி 3 போட்டிகள்

  • 0-5 எதிர் தென் கொரியா
  • 2-3 எதிர் லெபனான்
  • 0-2 எதிர் துர்க்மெனிஸ்தான்

பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணியைப் பார்க்கும்போது, புதிய திட்டங்களுடன் அந்த அணி இம்முறை SAFF சம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகியுள்ளது. குறிப்பாக இந்த தொடர் மற்றும் அடுத்து வரவுள்ள தொடர்களுக்காக பங்களாதேஷ் அண்மைய வாரங்களில் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு அதிகமான பயிற்சி ஆட்டங்களில் விளையாடி தமது போட்டி அனுவத்தை அதிகரித்துள்ளது.

ஒஸ்கார் புருசொன்

குறிப்பாக, உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் கட்டார், ஓமான் போன்ற சிறந்த அணிகளுடன் மோதிய பங்களாதேஷ், அதன் பின்னர் பிபா தரப்படுத்தலில் தம்மைவிட முன்னிலையில் உள்ள பலஸ்தீன் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் முத்தரப்பு தொடரில் ஆடியமை இளம் வீரர்களுக்கு சிறந்த தயார்படுத்தலை வழங்கியிருக்கும்.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

பங்களாதேஷ் சம்பியன்ஸ் லீக் தொடரில் இம்முறை சம்பியன் கிண்ணம் வென்ற பசுன்தரா கிங்ஸ் (Bashundhara Kings) அணியின் பயிற்றுவிப்பாளரான ஸ்பெயின் நாட்டின் ஒஸ்கார் புருசொன் (Oscar Bruzon), தற்போது பங்களேதேஷ் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இதனால் அவ்வணி சிறந்த புதிய நுட்பங்களை கற்றுக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

ஜமால் புயான்

பங்களாதேஷ் குழாமில் உள்ள வீரர்களை நோக்கும்போது அணியின் தலைவரும் அனுபவ வீரருமான ஜமால் புயான் மத்திய களத்தில் இலங்கை அணி வீரர்களுக்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுப்பார்.    இவருக்கு பக்க பலமாக வேகமாக ஆட்டத்தைக் காண்பிக்கும் இளம் வீரர் ரகிப் ஹுசைன் இருப்பார்.

அதேபோன்று, இலங்கை வீரர்களை தடுக்கும் வகையில் பின்கள வீரர்களான தாரிக் காசி மற்றும் தொபொ பர்மான் ஆகியோர் பங்களாதேஷ் பின்களத்தில் அரணாக இருப்பார்கள்.

பங்களாதேஷ் அணியின் இறுதி 3 போட்டிகள்

  • 1-4 எதிர் கிரிகிஸ்தான்
  • 0-2 எதிர் பலஸ்தீன்
  • 0-3 எதிர் ஓமான்

இறுதியாக,

இறுதியாக கடந்த 1995ஆம் ஆண்டு SAFF சம்பியன்ஷிப்பில் கிண்ணம் வென்ற இலங்கை அணி பிபா தரப்படுத்தலில் 205ஆவது இடத்தில் உள்ளது. தற்போது பிபா தரப்படுத்தலில் 189ஆவது இடத்தில் உள்ள பங்களாதேஷ் அணி 2003ஆம் ஆண்டில் இந்த தொடரில் கிண்ணம் வென்றுள்ளது. எனவே, இரண்டு அணிகளும் தமது இரண்டாவது SAFF சம்பியன்ஷிப்பில் வெற்றிக் கிண்ணத்தை பெறும் நோக்குடன் தமது முதல் போட்டியில் வெற்றி வேட்கையுடன் ஒக்டோபர் முதலாம் திகதி இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு களம் காணவுள்ளன.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<