இறுதி நேர ஒவ்ன் கோலினால் தோல்வியைத் தழுவிய இலங்கை

332
4th SAFF Women's Championship
Sri Lanka's Nalika Karunarathne in action against Nepal (4th SAFF Women's Championship)

இந்தியாவின் சிலிகுரி நகரில் நடைபெறும் 4ஆவது SAFF மகளிர் கால்பந்து சுற்றுத்தொடரில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இறுதி நேரத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நோக்கில் களமிறங்கிய இலங்கை அணிக்கு இப்போட்டி மிகவும் தீர்க்கமாக அமைந்தது. மாலைத்தீவுகள் அணியிடம் 5-2 என்று தோல்வியடைந்த இலங்கை அணி அடுத்த இரு போட்டிகளையும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.

எரந்தி, பிரவீனாவின் கோல்களினால் பூட்டானை வீழ்த்திய இலங்கை

பூட்டானுடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அணித்தலைவி எரந்தி லியனகே மற்றும் பிரவீனா பெரேரா ஆகியோர் அப்போட்டியில் கோல்களை அடித்தனர். எனினும் பலம் மிக்க நேபாளத்துடன் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு இருந்தது.

நேபாள அணி பூட்டான் மற்றும் மாலைத்தீவுகள் அணிகளை முறையே 8-0 மற்றும் 9-0 என வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணியுடன் நேபாள அணி வீராங்கனைகள் கோல் அடிக்கத் தடுமாறினர். குறிப்பாக இரண்டு போட்டிகளில் 11 கோல்களை அடித்த சாபித்ரா பான்டாரியினை இலங்கை பின்கள வீராங்கனைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

ஏற்கனவே அரையிறுதிக்கு தெரிவாயிருந்த நேபாளம் இப்போட்டியில் சற்று தளர்ந்த ஆட்டத்தையே வெளிக்காட்டியது. கவுண்டர் அட்டாக் முறைகளில் இலங்கைக்கு சில வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் அவர்கள் கோல் போடத் தவறினர்.

முதல் பாதிஇலங்கை 0-0 நேபாளம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலிருந்து நேபாள அணியினர் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடத் தொடங்கினர்.

எனினும் இலங்கை கோல் காப்பாளர் அயோமி ஷானிகா சிறப்பாக செயற்பட்டு, எதிரணியால் வழங்கப்பட்ட அனைத்து உதைகளையும் லாவகமாகத் தடுத்தார். இதனால் நேபாள அணி வீராங்கனைகள் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர்.

பதுவாவின் ஹெட்ரிக் கோலினால் மாலைத்தீவுகளிடம் தோல்வியுற்ற இலங்கை மகளிர் அணி

எனினும், போட்டி முடிவடைய மூன்று நிமிடங்களே இருக்கும் வேளையில் ருஷானி குணவர்தனவின் ஓவ்ன் கோல் இலங்கை அணிக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி இறுதி நேரத்தில் போட்டியை பறிகொடுத்தது.  

முழு நேரம்: இலங்கை 0-1 நேபாளம்

இந்தப் போட்டியின் பின்னர் இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்மின் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய போட்டியில் அணியின் செயற்பாடு திருப்தி அளித்தது. நேபாள அணியின் 4 முக்கிய வீராங்கனைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து விளையாடும் எமது திட்டம் சிறப்பாக செயற்பட்டது.

எனினும் மாலைத்தீவுகளுடனான போட்டியே தீர்க்கமான போட்டியாகும். அப்போட்டியில் நடுவரின் தீர்ப்புகள் எமக்கு திருப்தியளிக்கவில்லை

நேபாள மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் குமார் தாபா பேசுகையில்,

இலங்கை அணி மிகச் சிறப்பாகவும் சாதுர்யமாகவும் விளையாடியது. எனினும் எம்மால் போட்டியை வெற்றி பெற முடிந்தது. எவ்வாறிருப்பினும் இலங்கை வீராங்கனைகளின் விளையாட்டு எம்மை இறுதி வரை போராட வைத்தது.

அரையிறுதிக்கு எமதணி தயார். ஆட்டம் பகலில் இடம்பெறுவதை நாம் விரும்புகிறோம். அரையிறுதி பகலில் இடம்பெறுவது எமக்கு சாதகமானதாகும் என்றார்.