SAAC2016 – அஞ்சல் நீச்சல் போட்டிகளில் இலங்கை ஆதிக்கம்

256
South Asian Aquatic Championship 2016

சுகததாச உள்ளக நீச்சல்தடாக அரங்கில் நடைபெற்றுவரும் தெற்காசிய நீர்சார் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளின் நான்காவது நாளான நேற்றைய தினம் இடம்பெற்ற அஞ்சல் நீச்சல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

நேற்றைய தினம் இலங்கை நான்கு தங்கப் பதக்கங்களை சுவீகரித்ததுடன், இந்திய வீரர்கள் 24 தங்கப் பதக்கங்களை வென்றனர். இலங்கை வென்ற 4 தங்கப் பதக்கங்களில் 3 தங்கப் பதக்கங்கள் நேற்று மாலை இடம்பெற்ற அஞ்சல் நீச்சல் போட்டிகளில் பிரபலமான இந்திய வீரர்களை தோற்கடித்து பெறப்பட்டன.

 South Asian Aquatic Championship Hub

ஒலிம்பிக் வீரரான மத்திவ் அபேசிங்க, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான 100m ப்ரீஸ்டைல் போட்டியில் இலங்கை சார்பாக தங்கப் பதக்கம் வென்றார். இவர் 51.26 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்ததுடன், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாஹில் சோப்ரா 52.32 வினாடிகளில் போட்டியை முடித்துக் கொண்டார்.

மத்திவ் அபேசிங்கவின் இளைய சகோதரரும் வளர்ந்து வரும் நீச்சல் வீரருமான கைல் அபேசிங்க 18 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான பட்டர்ப்ளை (Buttterfly) நீச்சல் போட்டியில் 100m தூரத்தை 57.52 வினாடிகளில் முடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை மிஹிர் ராஜெந்திர அம்ப்ரே 56.22 வினாடிகளில் முடித்தும், வெண்கலப் பதக்கத்தை இலங்கையைச் சேர்ந்த U.A. குணரத்ன 58.48 வினாடிகளில் முடித்தும் பெற்றுக்கொண்டனர்.

Photos: South Asian Aquatic Championship 2016 – Day 2 

18 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் கீழ்ப்பட்டோருக்கான 6 ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டிகளில், இலங்கை வீரர்கள் 3 போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று அசத்தினர். 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சிரந்த டி சில்வா, மத்திவ் அபேசிங்க, K.P.S.B. சில்வா மற்றும் டிலோன் அபேசிங்க 3:30.87 வினாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றனர். சகோதரர்களான டிலோன் அபேசிங்க மற்றும் மத்திவ் அபேசிங்க இப்போட்டியில் சிறந்த முறையில் திறமையை வெளிக்காட்டியிருந்தனர்.

18 வயதிற்கு கீழ்ப்பட்டோருக்கான நிகழ்வில், திலங்க ஷெஹான், அகலங்க பீரிஸ், கைல் அபேசிங்க மற்றும் கவிந்த நுகவெல ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை அணி, இந்திய வீரர்களை விட 6 வினாடிகள் முன்னிலையில் போட்டியை நிறைவு செய்து இலகு வெற்றியை சுவீகரித்தனர். இலங்கை 3:33.97 வினாடிகளிலும் இந்தியா 3:39.98 வினாடிகளிலும் போட்டியை நிறைவு செய்தன.

Photos: South Asian Aquatic Championship 2016 – Day 3

எனினும், நேற்று இலங்கை அணி பெற்ற வெற்றிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியாக 18 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் 4x100m அஞ்சல் நீச்சல் போட்டி அமைந்திருந்தது. இப்போட்டியில் இலங்கை சார்பாக நவீஷா கருணாநாயக்க, வினொளி கழுவாரச்சி, ஷெஹந்தி குணவர்தன மற்றும் கிமிகோ ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதிச் சுற்றில் போட்டித் தூரத்தை கடக்க 50 மீட்டர்களே இருந்த நிலையில், ஏறத்தாழ 10 மீட்டர்களினால் முன்னிலை வகித்த இந்திய அணியை முந்திச் சென்ற கிமிகோ ரஹீம் அபாரமான திறமையை வெளிப்படுத்தி இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இலங்கை வீராங்கனைகள் 4:04.45 வினாடிகளில் போட்டித் தூரத்தை கடந்ததுடன் இந்திய அணி 4:06.17 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தது.

எவ்வாறாயினும், தெற்காசிய வலயத்தில் நீர்சார் விளையாட்டு ராட்சகனான இந்தியா 90 தங்கப் பதக்கம், 60 வெள்ளிப் பதக்கம், 14 வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 164 பதக்கங்களை வென்று அசைக்க முடியாதவாறு முதலிடத்தில் உள்ளது. இலங்கை 19 தங்கம், 46 வெள்ளி மற்றும் 73 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் நிலையிலுள்ளது. பங்களாதேஷ் 2 தங்கப் பதக்கங்களையும் பாகிஸ்தான் 1 தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளன.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு