இந்திய T20I அணியின் தலைவராகும் ருதுராஜ் கெய்க்வாட்

Asian Games 2023

290
Ruturaj Gaikwad to lead India in Asian games

இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி விபரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதன்படி, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைவராக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும், இந்திய மகளிர் அணியின் தலைவியாக ஹர்மன்ப்ரீத் கவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவின் ஹாங்ஸூ நகரில் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

ஏற்கனவே 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாக்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா பங்கேற்கவில்லை. சர்வதேச போட்டிகள் காரணமாக ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதை BCCI தொடர்ந்து தவிர்த்திருந்தது. 

இதனிடையே, மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளை பங்கேற்கச் செய்ய BCCI ஒப்புதல் அளித்தது. 

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கு முடிவு செய்திருந்த BCCI, நேற்றைய தினம் ஆசிய விளையாட்டு விழாக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஆசிய விளையாட்டு விழா நடைபெறுகின்ற காலப்பகுதியில் ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளதால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. 

இதன்படி, ஆசிய விளையாட்டு விழாவுக்கான இந்திய அணியின் தலைவராக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் இந்திய அணியில், IPL தொடரில் பிரகாசித்த இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அத்துடன், விக்கெட் காப்பாளர்களாக ஜித்தேஷ் சர்மாவும், பிரப்சிம்ரன் சிங்கும் இடம்பெற்றுள்ளனர். சகலதுறை வீரர்களாக சபாஷ் அஹமட், வொசிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர் 

சுழல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவி பிஷ்னோயும், வேகப் பந்துவீச்சாளர்களாக ஆவேஷ் கான், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் சிவம் மாவி ஆகியோரும் ஆசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இந்திய ஆடவர் அணி: 

ருதுராஜ் கெய்க்வாட் (தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வொசிங்டன் சுந்தர், சபாஷ் அஹமட், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங். 

காத்திருப்பு வீரர்கள் யஷ் தாகூர், சாய் கிசோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன். 

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இந்திய மகளிர் அணி:  

ஹர்மன்பிரீத் கவுர் (தலைவர்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<